ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த மகனுடன் சென்ற தந்தைக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் விபத்தில் காயமடைந்த மணீஷ் என்பவருக்கு கடந்த சனிக்கிழமை கோட்டா அரசு மருத்துவக் கல்லூரியில் காலில் அறுவைச் சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அறுவைச் சிகிச்சைக்கு பிறகு தனக்கு உதவிக்கு ஆள்தேவை என்பதால், அவரது தந்தை ஜெகதீஸை மருத்துவமனைக்கு அழைத்துள்ளார்.
சனிக்கிழமை காலை அறுவைச் சிகிச்சை அரங்குக்குள் மணீஷை அழைத்துச் சென்றபோது, அறைக்கு வெளியே அவரது தந்தை ஜெகதீஸ் காத்துக் கொண்டிருந்தார்.
ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜெகதீஸால் சரியாக பேச முடியாத நிலையில், அருகிலிருந்த மற்றொரு அறுவைச் சிகிச்சை அரங்கில் இருந்து ஜெகதீஸ் என்று அழைத்துள்ளனர்.
உடனடியாக அந்த அரங்குக்கு ஜெகதீஸ் சென்ற நிலையில், அவர் கையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான பணிகளை மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். தான் நோயாளி அல்ல, தனது மகனுடன் வந்ததை சொல்ல ஜெகதீஸ் முற்பட்டபோது, அவரால் பேச முடியவில்லை.
கை அறுக்கப்பட்டு, சிகிச்சைக்கான பணி தொடங்கியபோது, அரங்குக்குள் வந்த மருத்துவர் இவர் நோயாளி அல்ல எனத் தெரிவித்துள்ளார். உடனடியாக அறுவைச் சிகிச்சை நிறுத்தப்பட்டு ஜெகதீஸின் கையில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளது.
நோயாளி ஜெகதீஸை அழைத்தபோது, தன்னை அழைப்பதாக நினைத்து மணீஷின் தந்தை சென்றது குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளது.
இருப்பினும், நோயாளி யார் என்றுகூட உறுதி செய்யாமல் அறுவைச் சிகிச்சை செய்ய முயற்சித்த மருத்துவப் பணியாளர்களால் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்து, கோட்டா அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.