சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில், அவரின் தலைமையில் இன்று (ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
''அடுத்துவரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சாதிவாரிக் கணக்கெடுப்பை எப்போதுமே காங்கிரஸ் கட்சி எதிர்த்துவந்துள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் மன்மோகன் சிங் குறிப்பிட்டு பேசியதன் பிறகே 2010ஆம் ஆண்டு அமைச்சரவையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து பரிசீலனை செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக் கோரின. ஆனால், காங்கிரஸ் கட்சியோ சாதிக் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டது. இதிலிருந்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை கருவியாகவே அரசியலில் பயன்படுத்த விரும்புகின்றனர் என்பது தெரிகிறது.
சில மாநிலங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. இதுபோன்ற கணக்கெடுப்புகள் சமூகத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசியலால் சமூகக் கட்டமைப்பு சீர்குலைக்கப்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஆய்வுகளுக்கு பதிலாக சாதிவாரிக் கணக்கெடுப்பை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் நடத்த வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | அமேதியில் ராகுல்: ஆயுத தொழிற்சாலையை ஆய்வு செய்தார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.