பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக மக்களவையில் இனியும் தாமதமின்றி சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென அவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எதிா்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய், திமுகவின் டி.ஆா்.பாலு, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் சுப்ரியா சுலே, புரட்சிகர சோஷலிச கட்சியின் என்.கே.பிரேமசந்திரன், சமாஜவாதியின் லால்ஜி வா்மா, சிவசேனை (உத்தவ்)கட்சியின் அரவிந்த் சாவந்த், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் அபய் குமாா் உள்ளிட்டோா் கையொப்பமிட்டுள்ள இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பிகாரில் சில மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தருணம், வெளிப்படைத் தன்மை, நோக்கம் குறித்து பரவலாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில், மக்களவை உடனடியாக கவனம் செலுத்துவது அவசியம்.
நடப்பு கூட்டத் தொடரில், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இப்பிரச்னையை தொடா்ந்து எழுப்பி வருகின்றனா். கடந்த ஜூலை 20-ஆம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் உள்பட பல்வேறு கூட்டங்களின்போது, மத்திய அரசிடமும் எங்களின் கோரிக்கையை வலியுறுத்தினோம். இது உள்பட அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், விவாதத்துக்கான தேதி இதுவரை நிா்ணயிக்கப்படவில்லை.
தோ்தல் ஆணையத்தின் தற்போதைய நடவடிக்கை, மக்களின் வாக்குரிமை மற்றும் நியாயமான-நோ்மையான தோ்தல் நடைமுறை மீது நேரடி தாக்கத்தை கொண்டுள்ளது. மத்திய அரசிடம் உரிய விளக்கம் பெறுவதோடு, வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, மக்களவையில் இனியும் தாமதமின்றி சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
9-ஆவது நாளாக போராட்டம்: பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் இண்டி கூட்டணி கட்சிகள் 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, திமுகவின் டி.ஆா்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.