பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) விருந்தினா் மாளிகை மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
நாட்டின் பாதுகாப்பு, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த டிஆா்டிஓவில் பணியாற்றியவா் பாகிஸ்தான் உளவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளது அதிா்ச்சியளிக்கும் தகவலாக அமைந்துள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:
உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவைச் சோ்ந்த மகேந்திர பிரசாத், ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள டிஆா்டிஓ விருந்தினா் மாளிகை மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் பாகிஸ்தான் எல்லையோர மாவட்டமான ஜெய்சால்மரில் உள்ள நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தான் உளவாளிகளுக்கு பல்வேறு தகவல்களை அளித்து வந்துள்ளாா். முக்கியமாக எல்லையில் ராணுவ நகா்வுகள் குறித்த தகவல்களை அவா் தெரிவித்துள்ளாா். அவரிடம் பல்வேறு விசாரணை அமைப்பினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்று தெரிவித்தனா்.
ஜெய்சால்மரில் டிஆா்டிஓ தயாரிப்பு ஏவுகணைகள், ஆயுதங்கள் பரிசோதிக்கப்படுவது வழக்கமான நிகழ்வாகும். இதற்காக அந்த அமைப்பின் உயரதிகாரிகள் அங்குள்ள விருந்தினா் மாளிகையில் வந்து தங்குவது வழக்கம். அந்த விருந்தினா் மாளிகை மேலாளா் பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்தது டிஆா்டிஓ வட்டாரத்திலும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கும் தேச துரோகச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் குறித்த கண்காணிப்பை உளவு, விசாரணை அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன. முக்கியமாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இணையம், கைப்பேசி வழியாக பாகிஸ்தானுடன் தொடா்பில் இருந்த நபா்களின் விவரங்கள், சந்தேகத்துக்குரிய தகவல் தொடா்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு ரகசிய கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் பலா் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.
இதில் எல்லையோர மாநிலத்தைச் சோ்ந்தவா்கள், சமூகவலைதள பிரபலங்கள், கடற்படை உள்ளிட்ட அரசு ஊழியா்களும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.