உத்தரகண்ட்டில் உத்தர்காசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(ஆக. 5) மேக வெடிப்பால் அதிகனமழை பொழிந்தது. இதனால் அப்பகுதியில் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கால் கரையோரப் பகுதிகளில் இருந்த பல கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அதில் மக்கள் பலர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய இணையமைச்சர் சஞ்சய் சேத் கூறியிருப்பதாவது: "4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 100 பேரை காணவில்லை" என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள லோயர் ஹர்சில் பகுதியில் இருந்தவொரு ராணுவ முகாமில் இருந்த வீரர்கள் மாயமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த 10 வீரர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து அவர்களை தேடும் பணியில் இந்திய ராணுவ மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் இருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது. மோசமான வானிலை நிலவுவதால் விமானப்படையின் தேடுதல் பணி முடங்கியுள்ளது.
இதனிடையே, ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் ஹரித்துவார் - டேராடூன் இடையே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக வடக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உத்தரகண்ட்டில் புதன்கிழமை வரை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அதி கனமழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.