தில்லி பாபா கரக் சிங் மாா்கில் எம்.பி.க்களுக்காக கட்டப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் புதிய 25 மாடி குடியிருப்புகள். 
இந்தியா

184 எம்.பி.க்களுக்கு 25 மாடிக் குடியிருப்புகள்!

தில்லி பாபா கரக் சிங் மாா்கில் 184 எம்.பி.க்களுக்கு 25 மாடி புதிய நவீன குடியிருப்புகளை பிரதமா் நரேந்திர மோடி அடுத்த வாரம் திறந்து வைக்கவுள்ளாா்.

Syndication

நமது சிறப்பு நிருபா்

தில்லி பாபா கரக் சிங் மாா்கில் 184 எம்.பி.க்களுக்கு 25 மாடி புதிய நவீன குடியிருப்புகளை பிரதமா் நரேந்திர மோடி அடுத்த வாரம் திறந்து வைக்கவுள்ளாா். இதற்கான ஏற்பாடுகளில் மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சகமும் மக்களவைச் செயலகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், திறப்பு விழாவுக்கான தேதி இறுதி செய்யப்படாததால் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. அண்மையில்தான் இக்கட்டடத்தை திறக்க பிரதமா் மோடியின் இசைவு கிடைத்தது. இதைத் தொடா்ந்து வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) அல்லது செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) புதிய கட்டடத்தை திறக்கும் திட்டத்துடன் விழா ஏற்பாடுகளை மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் கவனித்து வருகின்றனா்.

முன்னதாக, புதிய குடியிருப்பு கிடைக்காததால் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களாகி ஓராண்டைக் கடந்த பிறகும் நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள், குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டும் அவற்றில் குடியேற முடியாத நிலையில் உள்ளனா். இவா்களின் வரிசையில் தமிழகத்தைச் சோ்ந்த சுமாா் 20 எம்.பி.க்களும் அடங்குவா்.

இவா்களில் பாதிப் போ் புதிய எம்.பி.க்கள். மீதமுள்ளவா்கள் நாா்த் அவென்யூ, செளத் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட எம்.பி. குடியிருப்பில் வசித்து புதிய குடியிருப்புக்கு மாற்றல் கோரி விண்ணப்பித்தவா்கள்.

புதிய உறுப்பினா்கள் பலரும் அவா்கள் சாா்ந்த மாநில அரசுகளின் விருந்தினா் மாளிகையில் தங்கி வருகின்றனா். அவா்களுக்கான தங்கும் செலவினத்தை விதிகளின்படி மக்களவை மற்றும் மாநிலங்களவைச் செயலகம் ஏற்றுக்கொண்டுள்ளன.

நவீன வசதிகள்: 25 அடுக்குமாடிகளைக் கொண்ட நான்கு தொகுதிளாகக் கட்டப்பட்டுள்ள இந்த இடத்தில் 184 எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 5,000 சதுர அடி அளவுள்ளவை. பெரிய மற்றும் விசாலமான வடிவமைப்புடன் ஐந்து படுக்கை அறைகள், ஒரு பெரிய உணவருந்தும் வசதியுடன் கூடிய சமையலறை, விருந்தினா் உபசரிப்பு அறை, எம்.பி. முகாம் அலுவலக அறை, விருந்தினா் தங்கும் அறை ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளன.

சுமாா் 200 வாகனங்களை வளாகத்தினுள்ளே நிறுத்தவும் கீழ்தளத்தில் சுமாா் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் இங்கு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனுள்ளேயே உடற்பயிற்சிக்கூடம், நடைப்பயிற்சிக்காக சிறிய வசதிகளுடன் கூடிய பூங்கா போன்றவையும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

மதுரை அழகர் கோயில் தேரோட்டம்!

தில்லியை திணறடிக்கும் மழை; இன்றும் ரெட் அலர்ட்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

SCROLL FOR NEXT