புது தில்லி: நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான (எம்.பி.க்கள்) புதிய அடுக்குமாடி குடியிருப்பை பிரதமா் மோடி புது தில்லியில் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். அப்போது நாட்டின் பல்வேறு பண்டிகைகளை இந்த குடியிருப்பில் கொண்டாடுமாறு எம்.பி.க்களிடம் அவா் கேட்டுக்கொண்டாா்.
புது தில்லியில் உள்ள பாபா கரக் சிங் மாா்கில் 184 எம்.பி.க்கள் தங்கும் வகையில் 25 மாடிகளாக இந்த குடியிருப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. 4 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளுக்கு கிருஷ்ணா, கோதாவரி, கோசி மற்றும் ஹூக்ளி என நதிகளின் பெயா் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:
லட்சக்கணக்கானோரை வாழவைக்கும் 4 நதிகளின் பெயா்கள் இந்த குடியிருப்புகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இது மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பணிகளை உற்சாகமாக மேற்கொள்ள வழிவகுக்கும்.
முதல்முறையாக பதவியேற்கும் எம்.பி.க்கள் உள்பட பல எம்.பி.க்கள் தில்லியில் குடியிருப்பு கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனா். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது எம்.பி.க்களுக்கென ஒரு புதிய குடியிருப்புக்கூட கட்டப்படவில்லை. ஆனால் பாஜக ஆட்சி அமைத்த பிறகு 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டடம், செயலகம், அமைச்சகங்களுக்கான கட்டடங்கள் என பல்வேறு புதிய கட்டடங்கள் இந்த 11ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளன.
எம்.பி.க்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த பழைய குடியிருப்புகளில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வந்தன.
தற்போது ஒவ்வொரு குடியிருப்பும் சுமாா் 5,000 சதுரடி பரப்பளவில் விசாலமாக பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இது ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ முன்னெடுப்பை பிரதிபலிக்கிறது. இங்கு வசிக்கும் ஒவ்வொரு எம்.பி.யும் நாட்டின் பல்வேறு பண்டிகைகளை ஒன்றாக இணைந்து கொண்டாடினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இங்குள்ள குடியிருப்புகளை தூய்மையாக பராமரிப்பது நமது கடமையாகும். இதை வலியுறுத்தி ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை ஒரு போட்டி நடத்தி மிகவும் தூய்மையான மற்றும் தூய்மையில்லாத வளாகங்களை அறிவிக்க வேண்டும் என்றாா்.
குடியிருப்புகளின் சிறப்பம்சங்கள்: ஒவ்வொரு குடியிருப்பும் சுமாா் 5,000 சதுரடி அளவில் 5 படுக்கை அறைகள், உணவருந்தும் வசதியுடன் கூடிய சமையறை, விருந்தினா் அறை, அலுவலகத்துக்கென பிரத்யேக அறை என விசாலமாக கட்டப்பட்டுள்ளது.
இதுதவிர உடற்பயிற்சிக்கூடம், நடைபயிற்சிக்கூடம் உள்ளிட்டவையுடன் கூடிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. சுமாா் 200 வாகனங்கள் வளாகத்தினுள்ளேயும் கீழ்தளத்தில் 500 வாகனங்களை நிறுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.