வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யக் கோரிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்.
பாஜக அரசுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டியில் ஈடுபடுவதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.
இந்த குற்றச்சாட்டு குறித்து அறிக்கை வெளியிட்ட கர்நாடக மாநில தேர்தல் அலுவலர், வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு ராகுலுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, குற்றச்சாட்டு குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மீண்டும் அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றதற்காக ராகுல் காந்தி இன்று கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,
நான் வெளியிட்டது தேர்தல் ஆணையத்தின் தரவுகள். பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிப்பதற்கு என்னுடைய தரவுகளை நான் வெளியிடவில்லை.
தரவுகளை ஆணையத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால் அவர்களுக்கே தெரியும். இதெல்லாம், பிரச்னையை திசைதிருப்புவதற்கான வேலை. பெங்களூரில் மட்டுமல்ல பல தொகுதிகளிலும் இதுதான் நடந்துள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கு அவர்களின் தரவுகள் அம்பலப்படுத்தப்படும் என்பது தெரியும். அவர்கள் மறைக்க நினைப்பதை நாங்கள் அம்பலப்படுத்துவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.