பிகாரில் கேட்டி பாஸ் மகன் கேட் குமார் என்ற பூனைக்கு புகைப்படத்துடன், பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே நாய், காகம், சோனாலி டிராக்டர், ஏன்.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில்கூட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் அடுத்தடுத்து பரபரப்பையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இவை அனைத்தும் சொல்லிவைத்தது போல பிகார் மாநிலத்திலேயே நடைபெற்றிருப்பதுதான் ஆச்சரியமான உண்மை.
பிகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த முறை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆதார் அட்டையோ, குடும்ப அட்டையோ, வாக்காளர் உரிமை பெற தகுதியான ஆவணமல்ல, இருப்பிடச் சான்று, பிறப்புச் சான்று உள்ளிட்ட 11 ஆவணங்கள் மட்டுமே தகுதியாக ஏற்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த முறை பாட்னாவின் முசோரியில் நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த முறை ரோஹ்தக் மாவட்டத்தில் கேட்டி பாஸ், கேட்டியா தேவி என்ற தம்பதியினரின் மகன் கேட் குமார் என்ற பூனைக்கு புகைப்படம், டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிமிகஞ்ச் கிராமம், வார்டு எண் 7, மகாதேவா(போஸ்ட்), நஸ்ரிகஞ்ச் காவல் நிலையத்துக்குள்பட்ட 821310 என்ற அஞ்சல் குறியீட்டு எண் முகவரியுடன் கூடிய விண்ணப்பத்தில் பூனையின் புகைப்படமும் இருந்தது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து, நஸ்ரிகஞ்ச் வருவாய் அதிகாரி கௌஷல் படேல் ஜூலை 29 ஆம் தேதி காவல் துறையில் புகார் அளித்தார்.
இந்தப் புகாருக்குப் பின்னர் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததன் அடிப்படையில், ரோஹ்தக் மாவட்ட ஆட்சியர் உதித்தா சிங் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
உதித்தா சிங்கின் உத்தரவின் பேரில், நசரிகஞ்ச் காவல் துறை அதிகாரிகள், பிஎன்எஸ் பிரிவுகள் 132, 61 (பி), 318 (4) இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விண்ணப்பத்தை அரசு இணையதள அமைப்பு எவ்வாறு ஏற்றுக்கொண்டது? இந்தச் சான்றிதழுக்கு அனுமதி கொடுத்தது யார்? என்பதை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆய்வாளர் ராகுல் குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.