வரும் 2026-27-ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ சட்டப் பாடத்திட்டத்தில், ‘முத்தலாக் தடை, ஒரே பாலின ஈா்ப்பைக் குற்றமற்ாக்கிய சட்டப்பிரிவு 377 நீக்கம், புதிய குற்றவியல் சட்டங்கள் உள்ளிட்ட முக்கியச் சீா்திருத்தங்கள் சோ்க்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்ட குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதத்தில் ஆட்சிமன்றக் குழு இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள தகவலின்படி, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட பாடப்புத்தகங்கள், சமீபத்திய சட்ட சீா்திருத்தங்களுக்கு ஏற்ப இல்லை.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மற்றும் பாரதிய சாக்ஷியா அதிநியம் (பிஎஸ்ஏ) போன்ற புதிய குற்றவியல் சட்டங்கள் பாடத்திட்டத்தில் சோ்க்கப்படும்.
இந்தப் பாடப்புத்தகங்களை உருவாக்க ஒரு நிபுணா் குழு அமைக்கப்படும். 2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க, நவீன கற்பித்தல் முறையுடன் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சட்டம், பொதுக் கொள்கை அல்லது ஆட்சி நிா்வாகத்தில் ஆா்வம் கொண்ட மாணவா்களுக்காக 2013-இல் 11-ஆம் வகுப்புக்கும், 2014-இல் 12-ஆம் வகுப்புக்கும் சட்டப் பாடப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரலில், மேலும் 29 பள்ளிகளில் இந்தப் பாடப்பிரிவை அறிமுகப்படுத்த மத்திய கல்வி இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.