பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் ‘அடுத்த அணுகுண்டை’ வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, கடந்த 7 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.
பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியிலுள்ள மகாதேவபுர பேரவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலை எடுத்து, பல்வேறு அதிசயங்களையும் ராகுல் பட்டியலிட்டார். அதன் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் வீசிய முதல் ‘அணுகுண்டு’ தீவிரமே இன்னும் அடங்காத நிலையில், பிரதமர் மோடியின் வெற்றியைக் கேள்விக் குறியாக்கும் வகையில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற வாரணாசித் தொகுதியில் பல்வேறு வாக்களர் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் 51வது வார்டு காஷ்மீரிகஞ்ச் பகுதியில் 50-க்கும் மேற்பட்டோர் ‘ராம்கமல் தாஸ்’ என்பவரின் மகன்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, உத்தரப் பிரதேச காங்கிரஸ் சமூக ஊடகங்களில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதனால், மிகப் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில், “வாரணாசியில் தேர்தல் ஆணையத்தின் மற்றொரு அதிசயத்தைப் பாருங்கள்! 'ராம்கமல் தாஸ்' என்ற ஒரே நபரின் பெயரில் 50 மகன்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்!
இளைய மகன் ராகவேந்திரா - 28 வயது, மூத்த மகன் பன்வாரி தாஸ் - 72 வயது!
தேர்தல் ஆணையம் இந்த முரண்பாடை தவறாகவுள்ளது என நினைத்து நிராகரிக்குமா? அல்லது மோசடி வெளிப்படையாக நடந்துள்ளதை ஏற்றுக்கொள்ளுமா?
இந்த வாக்குத் திருட்டு சம்பவம் வாரணாசி மக்கள் மட்டுமின்றி, முழு ஜனநாயகமும் ஏமாற்றப்பட்டதைத்தான் சொல்கிறது. இதற்கு நீங்கள் எப்போது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்போகிறீர்கள்” எனக் கேள்வியெழுப்பியுள்ளது.
2023 ஆம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வாக்காளர் பட்டியலில், பி 24/19 என்ற முகவரியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ராம்கமல் தாஸ் என்பவரே தங்கள் தந்தை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் 37 வயதுடைய 13 பேரும், 39 வயதுடைய ஐந்து பேரும், 40 வயதுடைய நான்கு பேரும், 40 வயதுடைய சிலர் மற்றும் 72 வயதுடைய இரண்டு பேரும் அடங்குவர்.
இதுகுறித்து அந்த முகவரியில் சென்று விசாரித்தபோது, அங்கு ஆச்சார்ய ராம்கமல் தாஸால் நிறுவப்பட்ட ராம் ஜானகி மட கோவில் ஒன்று இருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கோயிலின் தற்போதைய மேலாளர் ராமபரத் சாஸ்திரி கூறுகையில், “இந்த மடம் குருகுலமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் ஆசிரமத்தில், உலக வாழ்க்கையைத் துறந்த சீடர்கள் குருவையே தங்கள் தந்தையாகக் கருதுகிறார்கள்.
ஒருவர் துறவறம் பூண்ட பின்னர், அவரின் குடும்ப உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. அவர்களை அனைவரும் தங்கள் குருவையே அனைத்துமாகக் கருதுகின்றனர்” என்றார்.
ஆளும் பாஜக மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியிலேயே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
முன்னதாக, மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்யை விட 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.