சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டம் நாளைமுதல் (ஆக.15) அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் குறைந்த சுங்கச்சாவடி கட்டணத்தில் தடையற்ற பயணத்தை மேற்கொள்ள வசதியாக வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ரூ.3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த பாஸ் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை ஆண்டு முழுவதும் அதிபட்சம் 200 முறை கடந்து செல்ல முடியும்.
இந்த வருடாந்திர பாஸ் திட்டம் சரக்கு வாகனங்கள் அல்லாத காா், ஜீப் மற்றும் வேன்கள் உள்ளிட்ட தனியாா் வாகனங்களுக்கு மட்டுமானதாகும்.
இந்த பாஸ் திட்டத்தைப் பயன்படுத்துதல் மற்றும் புதுப்பித்தலுக்கான வசதிகள் ‘ராஜ்மாா்க் யாத்ரா’ செயலி மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ), மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை (எம்ஓஆா்டிஹெச்) வலைதளங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பாஸ் திட்டம் தேசிய நெஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மட்டுமே செல்லபடியாகும். மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த பாஸ் செல்லாது. இந்த சுங்கச்சாவடிகளில் வழக்கமான முறையில் ‘ஃபாஸ்டேக்’-இல் இருந்து கட்டணம் கழிக்கப்படும்.
இத் திட்டத்தின் கீழ் ஒரு சுங்கச்சாவடியை ஒரு முறை கடப்பது ஒரு பயணமாக கணக்கில் கொள்ளப்படும். அவ்வாறு 200 முறை வரம்பைக் கடந்ததும், அதே ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் ரூ. 3,000 செலுத்தி பாஸை புதுப்பித்துக்கொள்ள முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.