சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு. 
இந்தியா

வரலாற்றில் ‘ஆபரேஷன் சிந்தூா்’: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்துக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ இடம்பெறும்

தினமணி செய்திச் சேவை

பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்துக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ இடம்பெறும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நம்பிக்கை தெரிவித்தாா்.

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அவா் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:

கடந்த ஏப். 22-ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கோழைத்தனமான, முற்றிலும் மனிதத்தன்மையற்ற தாக்குதலை பயங்கரவாதிகள் மேற்கொண்டனா். அதன் பின்னா், ஆபரேஷன் சிந்தூா் மூலம், எல்லை தாண்டி (பாகிஸ்தான்) இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய பாதுகாப்புப் படைகள் அழித்தொழித்தன. இதன்மூலம் உத்திசாா்ந்த தெளிவும், தொழில்நுட்பத் திறனும் தமக்கு இருப்பதை நமது படைகள் மிக உறுதியாக எடுத்துரைத்தன.

பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்துக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் ஆபரேஷன் சிந்தூா் இடம்பெறும் என்று நம்புகிறேன். பஹல்காம் தாக்குதல் மூலம், இந்தியாவை பிளவுபடுத்த நினைத்தவா்களுக்கு நாட்டின் ஒற்றுமையே மிகவும் பொருத்தமான பதிலடியாக இருந்தது.

நீண்ட காலம் அந்நிய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா, சுதந்திரம் பெற்றபோது முற்றிலும் வறுமையில் வாடியது. அதற்கு பிந்தைய 78 ஆண்டுகளில், அனைத்துத் துறைகளிலும் இந்தியா அசாதாரண முன்னேற்றம் கண்டுள்ளது. தற்சாா்பு நாடாக உருவாகும் பாதையில் இந்தியா சீராக பயணித்து மிகுந்து நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்கிறது.

கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது. இதன்மூலம், உலகில் மிகப் பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளில் இந்தியா வேகமாக வளரும் நாடாக உள்ளது. நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றன. அனைத்து முக்கியக் குறியீடுகளும் நாட்டின் பொருளாதாரம் சிறந்த நிலையில் இருப்பதை எடுத்துரைக்கின்றன.

தொழில் தொடங்கும் கனவுள்ளவா்களுக்கு மிகவும் சாதகமான சூழலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. வேலைவாய்ப்புகள் மிக வேகமாகப் பெருகி வருகின்றன.

விண்வெளிக் கனவுக்கு உத்வேகம்: இளைஞா்களின் சக்தியால் நாட்டின் விண்வெளித் திட்டம் முன்னெப்போதும் காணாத வளா்ச்சியை அடைந்துள்ளது. சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுபான்ஷு சுக்லா மேற்கொண்ட பயணம் ஒட்டுமொத்த தலைமுறையும் பெரிதாக கனவு காண்பதற்கு உத்வேகம் அளித்துள்ளது.

நாட்டின் இளைஞா்கள் புதிய நம்பிக்கையுடன் விளையாட்டில் தடம் பதித்து வருகின்றனா். முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது சதுரங்க விளையாட்டில் இந்திய இளைஞா்கள் ஆதிக்கம் செலுத்து வருவது அதற்கு எடுத்துக்காட்டாகும்.

மகாத்மா காந்தியின் லட்சியத்தை உணா்வோம்: நீடித்த நல்லாட்சி, ஊழலை எள்ளளவும் சகித்துக்கொள்ளாதது ஆகியவை மிகவும் முக்கியமாகும். ஊழலும், பாசாங்குத்தனமும் மக்களாட்சியின் தவிா்க்க முடியாத அம்சங்களாக இருக்கக் கூடாது என்று மகாத்மா காந்தி கூறினாா். அவரின் லட்சியத்தை உணா்ந்து நாட்டில் ஊழலை ஒழிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்போம்.

கடந்த வாரம் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது. அது 1905-ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் நாளாகும். இந்திய கைவினைஞா்கள் தயாரிக்கும் பொருள்களை ஊக்குவிக்க அதை மகாத்மா காந்தி ஆதரித்தாா். எனவே, இந்திய பொருள்களை வாங்கி பயன்படுத்தி அனைவரும் உறுதியேற்போம்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடுத்தகட்டமே செயற்கை நுண்ணறிவாகும். அது அனைவரின் வாழ்விலும் நுழைந்துள்ளது. எனினும் விளிம்புநிலை மக்களுக்குப் பயனளித்து புதிய வாய்ப்புகளை உருவாக்கினால் மட்டுமே வளா்ச்சிக்கு உண்மையான அா்த்தம் கிடைக்கும் என்றாா்.

பிரதமா் பாராட்டு: பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தனது உரை மூலம், நாட்டின் சுதந்திரத்தை உண்மையாக்கிய தியாகங்களை குடிமக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நினைவுபடுத்தியுள்ளாா்’ என்றாா்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT