அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரேபோலவே பார்க்கிறோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று(ஆக. 17) செய்தியாளர்களுடன் பேசிய ஞானேஷ் குமார் தெரிவித்திருப்பதாவது: "இந்திய அரசமைப்பின்படி, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் 18 வயது பூர்த்தியானபின், ஒரு வாக்காளராக மாறுவதுடன் கட்டாயம் வாக்கு செலுத்தவும் வேண்டும்.
சட்டத்தின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்படுவதன் மூலமே அங்கீகரிக்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, தேர்தல் ஆணையம் இதே அரசியல் கட்சிகளிடம் எப்படிப் பாகுபாடு காட்ட இயலும்? பாரபட்சத்துடன் செயல்பட முடியும்?
தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரையில், அனைவரும் சமமே. யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராயினும் தேர்தல் ஆணையத்துக்கு அதுவொரு பொருட்டல்ல.
தேர்தல் ஆணையம் தமது அரசமைப்பு கடமையிலிருந்து பின்வாங்காது” என்றார்.
பிகார் விவகாரம் குறித்து விளக்கம்:
“தேர்தல் ஆணையத்தின் கதவுகள் ஒவ்வொருவருக்காகவும் எப்போதும் சமமாகவே திறக்கப்பட்டு இருக்கிறது. அடிமட்ட அளவில், அனைத்து வாக்காளர்களும், அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து பூத் அளவிலான அலுவலர்களும், அதிகாரிகளும், ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர். வெளிப்படையான முறையில் பணியாற்றி வருகிறோம்.
இந்தநிலையில், எங்களால் சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள் தங்களின் சொந்த அரசியல் கட்சிகளின் மாநில அளவிலான தேசிய அளவிலான தலைவர்களைச் சென்றடைவதில்லை என்பது மிக தீவிரமாகக் கருத்திற்கொள்ள வேண்டிய விஷயம். களத்தில் என்ன நடக்கிறது என்பதை புறந்தள்ளிவிட்டு குழப்பத்தை பரப்ப ஒரு முயற்சி இங்கு நடைபெறுகிறது.
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை முழு அளவில் வெற்றியடையச் செய்ய நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். பிகாரில் உள்ள 7 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துடன் துணை நிற்கும்போது, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மீது எந்தவொரு கேள்விக்குறிக்கும் இடமில்லை; அதேபோல, வாக்காளர்களின் மீதான நம்பகத்தன்மை மீதும் சந்தேகத்திற்கு இடமில்லை”.
“பூத் அளவிலான முகவர்கள்(பிஎல்ஏ) 1.60 லட்சம் பேர் உழைத்து, பிகாரில் வரைவு வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளனர். ஒவ்வொரு பூத்திலும் சர்பார்க்கப்பட்ட பின், இந்த வரைவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் பூத் அளவிலான முகவர்கள் இந்த பட்டியலில் உள்ள தரவுகளை கையொப்பமிட்டுச் சரிபார்த்துமிருக்கின்றனர். வாக்காளர்கள் தரப்பிலிருந்தும், மொத்தம் 28,730 ஆட்சேபணைகளும் பெறப்பட்டுள்ளன” என்றார்.
வாக்குத் திருட்டு விவகாரம் பற்றி:
“கடந்த சில நாள்களுக்கு முன், பல வாக்காளர்களின் புகைப்படங்கள் ஊடகத்துக்கு காட்டப்பட்டன. இவையனைத்தும் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. அந்த வாக்காளர்கள் மீது சில குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
எந்தவொரு வாக்காளரின் சிசிடிவி காட்சியையாவது தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா? வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர்கள் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே வாக்கு செலுத்தி ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும்.
மக்களவை தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பூத் அளவிலான முகவர்கள், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலுக்காக பணியாற்றியுள்ளனர். மக்கள் பலர் முன்னிலையில் இப்படி வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட செயல்பாட்டில் எந்தவொரு வாக்காளராவது வாக்குகளைத் திருட முடியுமா..?” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்திய விவகாரம் பற்றி:
“சில வாக்காளர்கள் மீது இரு முறை வாக்கு செலுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அதற்கான ஆதாரம் இருப்பின் அளிக்கலாம் என்று நாங்கள் கேட்டோம். ஆனால், இதுவரை அதற்கான பதில் இல்லை. தேர்தல் ஆணையமோ அல்லது எந்தவொரு வாக்காளரோ இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைப் பார்த்து பயப்படவில்லை.
இந்தியாவின் வாக்காளர்களைக் குறிவைத்து அரசியலில் ஈடுபடும்போது, அதிலும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்துவதாக அமையும்போது, இன்று, ‘தேர்தல் ஆணையம் அச்சத்திற்கு இடமின்றி பாறை போல உறுதியாக அனைத்து வாக்காளர்கள், அதாவது, அனைத்து பிரிவுகள், மதங்கள் அவற்றிலுள்ள ஏழைகள், செல்வந்தர், மூத்தவர், இளையோர், பெண்கள் என எவ்வித பாகுபாடின்றி உறுதுணையாக அவர்களுடன் நிற்கிறது, இனியும் நிற்கும்’ என்பதை தேர்தல் ஆணையம் ஒவ்வொருவருக்கும் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது” என்றார்.
அடிப்படை ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள்:
“தேர்தல் முடிவுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்த பின், சட்டத்தின்கீழ், அந்த அறிவிப்பு வெளியான 45 நாள்களுக்குள் அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடி, தேர்தல் மனுவை தாக்கல் செய்யலாம். அதில், தேர்தலை எதிர்த்து வாதிடலாம். ஆனால், 45 நாள் காலக்கெடு கடந்துவிட்டால், இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது, அது கேரளம், கர்நாடகம், பிகார் அல்லது வேறு எந்த மாநிலமானாலும் சரி, அது முறையாகாது. தேர்தல் நிறைவுற்று 45 நாள்களுக்குள்ளும் சரி, அதன்பின்பும் சரி, எந்த ஒரு வேட்பாளரும், அரசியல் கட்சியும் எவ்வித முறைகேட்டையும் கண்டறியவில்லை.
ஆனால், இன்று, பல நாள்கள் கழித்து, இப்படி அடிப்படை ஆதாரமற்ற புகார்களைச் சுமத்துவதையும் அதன் பின்னணியில் உள்ள காரணத்தை இப்போது வாக்காளர்களும் மக்களும் புரிந்துகொள்வார்கள்”.
“அடுத்ததாக, மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் எப்போது மேற்கொள்ள வேண்டும் என்பதை 3 தேர்தல் ஆணையர்களும் தீர்மானித்து அறிவிப்பார்கள்” என்றார்.
“இந்திய அரசமைப்பின்படி, இந்திய குடிமக்கள் மட்டுமே மக்களவை, சட்டப்பேரவை தேர்தலுக்கு வாக்கு செலுத்த முடியும். பிற நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அந்த உரிமை கிடையாது. ஒருவேளை, அவர்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால், வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்த செயல்பாட்டின்போது, அவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க சில ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். முறையான சரிபார்த்தலுக்குப்பின் அவர்களது பெயர்கள் நீக்கப்படலாம்.
ஒருவேளை, ஒரு குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்த வாக்காளராக நீங்கள் இல்லையெனில், சட்டத்தின்கீழ் உங்களுக்கு ஒரேயொரு வழியே இருக்கிறது - ‘வாக்காளர்கள் பதிவு சட்டங்கள், சட்டம் எண் 20, உள் பிரிவு(3), உள் பிரிவு (பி)’ அதன்கீழ், நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகுதியை சேர்ந்த வாக்காளராக இல்லையெனில், உங்கள் புகாரை பதிவு செய்யலாம்” என்றார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணிகள்(எஸ்.ஐ.ஆர்.) பற்றி:
“கடந்த 20 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டவில்லை. இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை இதனை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைக் களைவதே இதன் முக்கிய குறிக்கோளாகும். அரசியல் கட்சிகளிடமிருந்து புகார்கள் அதிகமாக பெறப்படும்போது, இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது”.
“இந்தியாவில் ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதால் குழப்பம் நிலவிய நிலையில், அதனை தேர்தல் ஆணையம் கவனத்திற்கொண்டு கடந்த மார்ச் மாதம் பிரச்சினையை முடித்து தீர்வும் கண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் 3 லட்சம் மக்கள் இந்த குளறுபடியில் இருந்ததும் கண்டறியப்பட்டு பின் சரிசெய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றிருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட வாக்காளரின் அடையாள அட்டை எண் வெவ்வேறாக இருக்கும். இதனை, ‘ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் இருப்பதாக கொள்ளலாம்’.
கடந்த 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, தொழில்நுட்ப வசதி பெருமளவில் இல்லாததால், இடம்பெயர்ந்தவர்கள் பலரது பெயர்கள் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று, இணையதள வசதி உள்ளது. இணையதள முகவரியில் பதிவு செய்யும் வசதி வந்துள்ளது. இதனால், இந்த செயல்பாடுகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
எனினும், அவசரகதியில் இதனை செயல்படுத்தினால், எந்தவொரு வாக்காளரின் பெயரும் விடுபட்டு அல்லது நீக்கப்பட்டுவிடும் அபாயமும் இருக்கிறது. அதையும் கவனத்திற்கொண்டு செயல்பட வேண்டியுள்ளது” என்றார்.
இதையும் படிக்க: வாக்குத் திருட்டு! அதிசயமே அசந்துபோகும் அதிசயங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.