அயர்லாந்தில் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதாக இந்தியர் ஒருவர் சமூக ஊடகத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அவரின் சமூக ஊடகப் பதிவில்,
அயர்லாந்தில் பணிபுரியும் நான் (22), வேலை முடிந்ததும் பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் காரில் வந்த சிலர் (அயர்லாந்து நாட்டவர்) என்னை அழைத்தனர்.
காரில் வந்தவர்கள் முகவரி ஏதேனும் கேட்பதற்காகத்தான் அழைப்பதாக நினைத்து, அவர்கள் அருகில் சென்றேன். ஆனால், அவர்கள் என்னுடைய கன்னங்கள் அழகாய் இருப்பதாகச் சொன்னார்கள். நானும் அவர்களின் விளையாட்டாய் நினைத்து, நன்றி கூறினேன்.
தொடர்ந்து, இரண்டாவது முறையாக அதே சமயத்தில் மீண்டும் வந்து, என்னை அழகானவர் என்று குறிப்பிட்டதுடன், சில தவறான வார்த்தைகளையும் கூறினர்.
இதனையடுத்து, மூன்றாவது முறையாக இனவெறித் தாக்குதல் வார்த்தைகளால் கத்தினர். நான் பேருந்தில் ஏறியபோதும், அவர்கள் அங்கேயே காத்திருந்தனர்.
என்னைப் போன்று வேறொருவருக்காகத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், அவர்கள் என்னைப் போன்று அமைதியாக இல்லாமல், எதிர்வினையைக் காட்டுபவர்களைத்தான் எதிர்பார்க்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.
பாதிக்கப்பட்ட இந்தியரின் பதிவுக்கு பலரும் ஆறுதலும் நேர்மறையான வார்த்தைகளையும் கூறி, ஆற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி, உண்மையான அயர்லாந்து நாட்டவர் யாரையும் காயப்படுத்த மாட்டார்கள் என்றுகூறி, பாதிக்கப்பட்ட இந்தியருக்கு சில அயர்லாந்து நாட்டவரும் ஆறுதல் கூறினர்.
அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இம்மாதத் தொடக்கத்தில், அயர்லாந்தில் வசித்து வரும் கேரள தம்பதியரின் 6 வயது சிறுமியின் மீது அயர்லாந்து சிறுவர்கள் இனவெறித் தாக்குதல் நடத்தினர். சிறுமியை மிரட்டியதுடன், சிறுமியின் அந்தரங்க உறுப்பிலும் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஒரு மாதத்திலேயே இந்தியர்கள் மீது 4 இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... நாய் படும் பாடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.