பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல் நிலவுவதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் விமர்சித்துள்ளார்.
‘எமர்ஜென்ஸி காலத்தைவிட மோசமான சூழல் இப்போது நாட்டில் நிலவுகிறது’ என்று ராஷ்திரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஆக. 17-இல் பிகாரில் தொடங்கிய ‘வாக்குரிமைப் பேரணி’ நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து, இன்று(ஆக. 18) தேஜ் பிரதாப் யாதவ் பேசியிருப்பதாவது: “இது உண்மைதான். பிகாரிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிக மோசமான சூழல் நிலவுகிறது. அமைப்பு(சிஸ்டம்) சீர்கெட்டுவிட்டது. இதனை சீரமைக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் வெற்றி பெறும் மக்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்” என்றார்.
முன்னதாக, ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமைமுதல் மாநிலம் முழுவதும் வாக்குரிமைப் பேரணியை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொடங்கினார்.
இந்தப் பேரணிக்கு புறப்பட்டுச் சென்ற ராஷ்திரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், “பாஜக தலைமையிலான மத்திய அரசின்கீழ் நாட்டில் நிலவும் சூழல், அவசரநிலை காலத்தைவிட மோசம்.
நாட்டில் நிலவும் சூழலுக்கு எதிராக நாங்கள் ஒரு போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளோம். ராகுல் காந்தியும் எங்களுடன் இருப்பது நல்ல விஷயம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.