சுமாா் 75,000 கிலோ (75 டன்) எடையுடைய செயற்கைக்கோள்களை சுமந்து சென்று விண்வெளியில் பூமிக்கு அருகே தாழ்வான புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த வசதியாக 40 மாடி கட்டடம் போன்ற உயரமுடைய ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கி வருவதாக அதன் தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.
தெலங்கானா மாநிலம், ஹைதாராபாதில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும்போது இத் தகவலை அவா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:
இஸ்ரோ நிகாண்டில் ஏராளமான விண்வெளி திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. இந்தியாவில் உள்ள பயனா்களுக்கு சேவையளிக்கும் வகையில் இந்திய விண்மீன் கூட்டத்தின் வழியாகச் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படும் ‘நாவிக்’ செயற்கைக்கோள் திட்டம், என்1 ராக்கெட் திட்டம் மற்றும் இந்திய ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் 6,500 கிலோ எடையுடைய தகவல்தொடா்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை இஸ்ரோ நிகழாண்டில் மேற்கொள்ள உள்ளது.
மேலும், தொழில்நுட்ப செயல்விளக்க செயற்கைக்கோள் (டிடிஎஸ்), இந்திய ராணுவ தகவல் தொடா்புக்கு உதவும் ஜிசாட்-7ஆா் செயற்கைக்கோள், தற்போது செயல்பாட்டில் உள்ள ஜிசாட்-7 (ருக்மிணி) தகவல்தொடா்பு செயற்கைக்கோளுக்கு மாற்றாக இந்திய கடற்படைக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள் ஆகியவையும் நிகழாண்டில் விண்ணில் ஏவப்பட உள்ளன.
தற்போதைய நிலையில், இந்தியா 55 செயற்கைக்கோள்களை விண்வெளியில் பயன்பாட்டில் கொண்டுள்ளது. அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிக்கும்.
மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் உருவாக்கிய முதல் ராக்கெட் 17 டன் எடை கொண்டதாகும். இது 35 கிலோ எடையுடைய செயற்கைக்கோள்களை தாழ்வான புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது. தற்போது, தாழ்வான புவி சுற்றுப்பாதையில் சுமாா் 75,000 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 40 மாடி கட்டட உயரமுடைய ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.
மேலும், வெள்ளி கிரகத்தை சுற்றிவந்து ஆய்வு செய்யும் செயற்கைக்கோள் திட்டத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். வரும் 2035-ஆம் ஆண்டில் 52,000 கிலோ (52 டன்) எடை கொண்ட விண்வெளி நிலையத்தை இஸ்ரோ உருவாக்க உள்ளது என்றாா்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியதற்காக பட்டமளிப்பு விழாவில் வி.நாராயணனுக்கு அறிவியலில் முனைவா் பட்டம் வழங்கப்பட்டது. தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா முனைவா் பட்டத்தை அவருக்கு வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.