ஜார்க்கண்ட் மாநிலத்தில், சுமார் 51 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலைச் செய்யும் திட்டத்துக்கு, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இன்று (ஆக.22) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அம்மாநிலத்தில் உள்ள வெவ்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் 103 சிறைக் கைதிகளின் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பட்டியலில் இடம்பெற்ற 51 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலைச் செய்ய முதல்வர் ஹேமந்த் சோரன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த முடிவானது, அந்தக் கைதிகள் அனைவரையும் விசாரித்த சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள், காவல் அதிகாரிகள், சிறை அதிகாரிகள் மற்றும் நன்னடத்தை அதிகாரிகள் ஆகியோரது கருத்துக்களைப் பெற்ற பிறகு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுதலைச் செய்யப்படும் கைதிகளின் குடும்பம், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றின் பின்னணிகளை சரிபார்த்து, சிறையில் இருந்து விடுதலையான பின்னர் அவர்களது மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் சோரன் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, 2019-ம் ஆண்டு முதல் ஜார்க்கண்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்ட 619 கைதிகளை மாநில தண்டனை மறுஆய்வு வாரியம் விடுதலைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.