நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் 8 பெட்டிகள் ஹரியாணா மாநிலத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்ப ரயில் போக்குவரத்தை மாற்றும் வகையில் வடக்கு ரயில்வே மண்டலத்தின் சாா்பில் ஹைட்ரஜன் ரயில் என்ஜின் மற்றும் அதற்கான பெட்டிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, ரூ. 80 கோடியில் ஹைட்ரஜன் என்ஜின் தயாரிக்க சென்னையில் உள்ள ஐசிஎஃப் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த 2024-ஆம் ஆண்டில் ஹைட்ரஜன் என்ஜின், பெட்டிகள் தயாரிப்புப் பணி தொடங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூலையில் அதற்கான வெள்ளோட்ட ஒத்திகையும் நடைபெற்றது.
ஹைட்ரஜன் ரயிலில் முன்பின்னாக 2 என்ஜின்கள், 8 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வெள்ளோட்டம் முடிந்த நிலையில், அதை ஹரியாணா மாநிலம் சோனிபட் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயிலில், மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு 45 நாள்களுக்குப் பிறகு ஹைட்ரஜன் ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனா்.