புது தில்லி: ஒரு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டால், அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றத்தால் பாதிக்கப்பட்டவரின் உரிமை, வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்த குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைக்கு இணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.
இன்று வழக்கு விசாரணையின்போது, ஒரு குறிப்பிடத்தக்க உத்தரவை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. அதன்படி, ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் உட்பட, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.
ஒரு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு குறைந்த சட்டப் பிரிவில் தண்டனை வழங்கப்பட்டாலோ அல்லது போதுமான இழப்பீடு வழங்கப்படாததற்கு அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்ட வழக்கிலும், குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு மேல்முறையீடு செய்ய சட்டப்பிரிவு 372 விதிமுறையின்படி முழு உரிமை உள்ளது என்று நாங்கள் கருகிறோம் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்டவரை விடுவிப்பதற்கு அல்லது குறைந்தபட்ச தண்டனை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஒரு குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமையை மறுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
ஒரு வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கான, மேல்முறையீட்டு வாய்ப்பை உறுதி செய்ததோடு, விரிவுபடுத்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், அவ்வாறு மேற்கொள்ளப்படும் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போதே மேல்முறையீட்டாளர் அல்லது பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டால், அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் அத்தகைய மேல்முறையீட்டு வழக்குகளை தொடர்ந்து நடத்தலாம் என்றும் வழிகாட்டியிருக்கிறது.
அதாவது, ஒரு குற்றத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர், உரிமையின் அடிப்படையில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 374-இன் கீழ் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு, மேலும் அவர் எந்த நிபந்தனைகளுக்கும் உள்பட்டவர் அல்ல. மேலும், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர், குற்றத்தின் தன்மை எதுவாக இருந்தாலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி மேல்முறையீடு செய்ய உரிமை பெற்றவர் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு கூறியிருக்கிறது.
இதையும் படிக்க... இந்திரா காந்தி போல அல்ல, பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.