ஜம்மு - காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும், 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக கத்ரா பகுதியிலுள்ள வைஷ்ணவி தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தொடர் மழை காரணமாக ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்திற்குட்பட்ட கத்ரா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. வைஷ்ணவி தேவி கோயில் அருகே உள்ள குகைக்கோயிலில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கியதாக இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கத்ரா வருவாய் கோட்டாட்சியர் பியூஷ் தோத்ரா கூறியதாவது, ''நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 5 உடல்கள் மீட்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 10 முதல் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் கிடைத்த பிறகே விரிவாகக் கூற இயலும்'' எனக் குறிப்பிட்டார்.
இதேபோன்று வைஷ்ணவி தேவி கோயில் வாரியம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
''அத்க்வாரி பகுதியிலுள்ள இந்திரபிராஸ்தா போஜனாலயாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தேவையான உபகரணங்கள், இயந்திரங்களுடன் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு - காஷ்மீரில் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், மண் அரிப்பும் ஏற்பட்டு வருகிறது.
கதுவா மாவட்டத்தில் ஆக. 11ஆம் தேதி ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.