ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை, இந்திய விமானப் படையினர் மேற்கொண்டு வருவதாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கனமழை பெய்து முக்கிய நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டமைப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ராணுவம், விமானப் படை உள்ளிட்ட படைகள் செய்து வருகின்றன.
இதில், விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ.-17 மற்றும் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட டேரா பாபா நானக், பதான்கோட் மற்றும் அக்னூர் ஆகிய பகுதிகளில் சிக்கியிருந்த ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், விமானப் படையின் பிரத்யேக விமானங்கள் மூலம், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தரையிறக்கப்பட்டதுடன், கடந்த 3 நாள்களில் மட்டும் 7,300 கிலோ அளவிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் கனமழையானது தொடர்ந்து நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், வெள்ளம் அதிகரிக்கும் அபாயமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஸ்ரீநகரில்.. ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசர தரையிறக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.