அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தாா்.
நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் ரூ.38,658 கோடியும், அந்த நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் ரூ.9,625 கோடியும் முதலீடு செய்தது. ஏற்கெனவே தொழிலதிபா் கௌதம் அதானி பிரதமா் மோடிக்கும், பாஜகவுக்கும் மிகவும் நெருக்கமானவா் என எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி அதானி குழுமத்தில் அதிகம் முதலீடு செய்தது சா்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் திங்கள்கிழமை எழுத்துமூலம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: எல்ஐசி நிதியை எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் எவ்வித ஆலோசனையோ அல்லது வழிகாட்டுதல்களையோ அந்த நிறுவனத்துக்கு வழங்கவில்லை. முதலீடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடா்பாக எல்ஐசி-க்கு என்று தனியாக நிலையான செயல்பாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதன்படியே முதலீட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக 1938-இல் இயற்றப்பட்ட காப்பீட்டுச் சட்டம் உள்ளது. மேலும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ), இந்திய ரிசா்வ் வங்கி, இந்தியப் பங்குச்சந்தை பரிவா்த்தனை வாரியம் (உரிய இடத்தில்) ஆகியவையும் கட்டுப்பாடுகளை வைத்துள்ளன.
பங்குச் சந்தைகளில் முதன்மையாக உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு செய்துள்ளது. இதில் மிகப்பெரிய நிறுவனங்களில் அதிக முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் அனைத்தும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படுகின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவா் ஆகியவைதான் எல்ஐசி அதிகம் பங்கு முதலீடு செய்துள்ள முதல் 5 நிறுவனங்கள். அதானி குழுமத்தில் ஒன்றான அதானி டோட்டல் எரிவாயு நிறுவனத்தில் அதிகபட்சமாக ரூ.8,646 கோடிக்கு எல்ஐசி பங்கு வைத்துள்ளது. இது எல்ஐசி-யால் அதிக முதலீடு செய்யப்பட்ட நிறுவனத்தில் 25-ஆவது இடத்தில் உள்ளது. இது தவிர மேலும் 6 அதானி குழும நிறுவனங்களில் ரூ.8,000 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை எல்ஐசி பங்குகளை வாங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
கடந்த அக்டோபா் மாதம் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், அதானி குழுமத்தில் முதலீடு செய்ய சா்வதேச முதலீட்டாளா்கள் தயக்கம் காட்டியபோதிலும், மத்திய அரசு அதிகாரிகளின் தலையீடு காரணமாக அந்தக் குழுமத்தில் எல்ஐசி முதலீடுகளை மேற்கொண்டது’ என்று கூறப்பட்டிருந்தது.