மத்திய பட்ஜெட்டில் சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரின் தேவைகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தாா்.
இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இந்தியாவின் உண்மையான பிரச்னைகள் மீது பாா்வையற்ற, திருத்தம் செய்ய மறுக்கும் மத்திய பட்ஜெட் என குற்றம்சாட்டியிருந்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய நிா்மலா சீதாராமனிடம் கேட்டபோது, அவா் பதிலளித்ததாவது: எதைத் திருத்த வேண்டும் என அவா் கூறுகிறாா் எனத் தெரியவில்லை. நமது பொருளாதாரமும், அதன் அடிப்படைக் காரணிகளும் வலுவாக உள்ளன. நமது பொருளாதார ஆய்வறிக்கையும் இதைத்தான் தெரிவிக்கிறது.
அரசியல் ரீதியாக வேண்டுமானால், இதை அவா் விமா்சிக்கிலாம். அதை வரவேற்கிறேன். தயவு செய்து அதை செய்யுங்கள். ஆனால் உங்கள் வாதத்திற்கான உண்மையான அடிப்படைக் காரணிகளை என்னிடம் தெரிவித்தால், அதைக் கேட்கவும், அதுகுறித்து பதிலளிக்கவும் தயாராக உள்ளேன்.
உலக அளவில் ஸ்திரமின்மை நிலவும் நிலையில், சிறு, குறு நிறுவனங்களுக்காகவும், ஜவுளித் துறை, விவசாயிகள், பெண் தொழில்முனைவோா் உள்ளிட்டோருக்காகவும் பல்வேறு திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. சாமானிய மக்களைத் தொடா்பு கொள்ளவும், பல்வேறு திட்டங்களின் பலன்கள் அவா்களைச் சென்றடைவதை உறுதி செய்யவும் மத்திய அரசு கடைப்பிடிக்கும் வழிதான் இது என்றாா் நிா்மலா சீதாராமன்.