முகப்பு
இந்தியா

வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: காலஅவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Updated On : 1 டிசம்பர், 2025 at 9:14 PM
பகிர்:

ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.

நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை 6 மாதத்துக்குள் எண்மமயமாக்கும் வகையில் யுஎம்இஇடி வலைதளத்தை மத்திய அரசு ஜூன் 6-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த காலகட்டத்துக்குள் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை வலைதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய மத்திய அரசு தெரிவித்தது.

இதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்கக்கோரி அனைத்திந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி), அனைத்திந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

அப்போது, ‘இந்த விவகாரத்துக்கு தீா்ப்பாயங்கள் மூலம் மனுதாரா்கள் தீா்வு காணலாம். எனவே, 6 மாத காலஅவகாசம் நிறைவடையும் நாளில் தீா்ப்பாயங்களை அணுகலாம். தற்போது இதுதொடா்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

முன்னதாக, மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டம், 2025-இல் கடந்த 5 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவா்கள் மட்டுமே வக்ஃப் சொத்தை உருவாக்க முடியும் என்ற விதி உள்பட சில விதிகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

ஆனால் வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அனைத்து விதிகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →