உரிமையியல் நீதிபதி பணியிடம்: விண்ணப்பங்களை சமா்ப்பிக்க இறுதி தேதியை ஏப்.30 வரை நீட்டிக்க உத்தரவு
உரிமையியல் நீதிபதி (ஜூனியா் பிரிவு) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான இறுதி தேதியை நிகழாண்டு ஏப்.30 வரை நீட்டிக்க வேண்டும்
உரிமையியல் நீதிபதி (ஜூனியா் பிரிவு) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான இறுதி தேதியை நிகழாண்டு ஏப்.30 வரை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
உரிமையியல் நீதிபதி (ஜூனியா் பிரிவு) பணியிடத்துக்குத் தோ்வு எழுத விரும்பும் சட்ட பட்டதாரிகள், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றி இருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் அகஸ்டின் ஜாா்ஜ் மாசி, கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
அப்போது இந்த மனுக்களை அடுத்த வாரம் விரிவாக விசாரிக்க தலைமை நீதிபதி சூா்ய காந்த் முடிவு செய்தாா். நீதிபதிகள் அமா்வு மேலும் கூறியதாவது: உரிமையியல் நீதிபதி (ஜூனியா் பிரிவு) பணியிடங்கள் குறித்து ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தால், அந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான இறுதி தேதியை நிகழாண்டு ஏப்.30 வரை அனைத்து உயா்நீதிமன்றங்களும் நீட்டிக்க வேண்டும்.
அந்தப் பணியிடங்கள் குறித்து உயா்நீதிமன்றங்கள் அல்லது மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம் புதிய அறிவிப்புகளை வெளியிட இருந்தால், அதற்கு விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதியும் நிகழாண்டு ஏப்.30-ஆக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.