வீடுகள், கட்டடங்களில் மேற்பகுதியில் சூரியமின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதை மேலும் துரிதப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு ரூ.5,780 கோடி கடன் வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 2027-ஆம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகளில் குறைந்த செலவில் மின்உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமா் சூரிய மின்உற்பத்தித் திட்டம் மூலம் உலகில் மிகவும் வேகமாக இத்திட்டத்தை முன்னெடுக்கும் நாடாக இந்தியா உருவாகி வருகிறது. ‘சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் மின்சாரம் உற்பத்தி செய்யும் இத்திட்டத்தில் இந்தியாவின் செயல்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஆசிய வளா்ச்சி வங்கி இந்த கடனுதவியை அளிக்க முன்வந்துள்ளது. இதன் மூலம் இத்திட்டத்துக்கு நிதி திரட்டுவதில் உள்ள சிக்கல் குறையும். மேலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான மின்சாதன பொருள்கள் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும்’ என்று அந்த வங்கியின் இந்தியப் பிரிவு இயக்குநா் மியோ ஒகை தெரிவித்துள்ளாா்.
இதன் மூலம் இந்தியாவில் 30 ஜிகாவாட் மின்சாரத்தை வீடுகள், கட்டடங்களின் மேல்பகுதியில் சூரியமின் தகடுகளை நிறுவி உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கை எட்டுவதும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பது, தொலைதூர மக்களுக்கும் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வாய்ப்பளிப்பது ஆகியவை சாத்தியமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.