நமது சிறப்பு நிருபர்
அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தின் மூன்றாவது முனைய இறுதிக்கட்ட விரிவாக்கப் பணிகள் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என்று விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் முரளிதர் மோஹல் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் முரளிதர் மோஹல் திங்கள்கிழமை அளித்த எழுத்துபூர்வ பதில் வருமாறு:
இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலை இரண்டு கட்டங்களாக ரூ. 2467 கோடி செலவில் மேற்கொண்டுள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ், ஒரு புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகள் கையாளும் திறன் 3 கோடியாக அதிகரித்து அந்த முனையம் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் இரண்டாம் கட்ட மூன்றாவது முனைய மேம்பாட்டுத் திட்டத்தின் பயன்பாடு பிப்ரவரி, 2022-இல் இருந்து ஜூன், 2026- ஆக திருத்தப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று, புயல் தாக்கம், அதிக மழை பொழிவு போன்ற காரணங்களால் இந்த திட்டப்பணிகள் தாமதமாகி வருகின்றன. ஏற்கெனவே அங்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் இணைப்புச்சாலைகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டன.
ஏரோபிரிட்ஜுகள் உள்ளிட்ட பிற வசதிகள் 2026-ஆம் ஆண்டு நவம்பரில் முழு பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.