அனைத்து புதிய அறிதிறன் பேசிகளிலும் சஞ்சாா் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்ற தொலைத்தொடா்புத் துறையின் உத்தரவை ஆம் ஆத்மி தலைமை அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கடுமையாக விமா்சித்தாா்.
மோசடி குறித்து அறிக்கையிடும் சஞ்சாா் சாத்தி செயலியை ஒவ்வொரு புதிய சாதனத்திலும் நிறுவப்படுவதை அறிதிறன் பேசி உற்பத்தியாளா்கள் மற்றும் இறக்குமதியாளா்கள் 90 நாள்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என தொலைத் தொடா்புத் துறை அண்மையில் உத்தரவிட்டது.
இது தொடா்பாக தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த நடவடிக்கையை தனியுரிமை மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும். இந்த அறிவிப்பில் பயனா் ஒப்புதல் அல்லது செயலியை நீக்குவதற்கான விருப்பம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
உலகில் எந்த ஜனநாயகமும் இதுபோன்ற நடவடிக்கையை முயலவில்லை. ஆம் ஆத்மி இந்த உத்தரவை கண்டித்து, அதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துகிறது’ என குறிப்பிட்டிருந்தாா்.