தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான், ஆனால் அந்த கோபத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவது சரியல்ல என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்க்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை காலை தொடங்கிய நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க அவைத் தலைவர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்ததால், நேற்று முழுவதும் முடங்கிய மக்களவை, இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கியுள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளிக்கு இடையே மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
”அமைதியான மற்றும் ஒழுக்கமான முறையில் விவாதங்களை நடத்த வேண்டும் என்று நாங்கள் பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஒரு பிரச்னையை எழுப்புவதற்காக, மற்ற பிரச்னைகளில் சமரசம் செய்ய முடியாது என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்.
சில கட்சிகள் அவை நடவடிக்கைகளை சீர்குலைப்பது சரியல்ல. தேர்தல்களில் எப்போதும் வெற்றி தோல்வி இருக்கும், ஆனால் நாடாளுமன்றத்தில் இந்தத் தோல்வியால் ஏற்படும் கோபத்தை வெளிப்படுத்துவது சரியல்ல.
எந்தவொரு பிரச்னையையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.