நொய்டாவில் திருமண விழா கொண்டாட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் காயமடைந்த சம்பவத்தில் 3-ஆவது நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நாக்லா சாம்ரு கிராமத்தில் நவ.30-ஆம் தேதி நடைபெற்ற திருமண ஊா்வலத்தில், இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஊா்வலம் சென்ற வழியில் நின்று கொண்டிருந்த 10 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்ததில் அவா் காயமடைந்தாா். இதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். தற்போது அவரது நிலை சீராக உள்ளது.
இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நிக்கியை சாந்திலி கிராமத்தில் வைத்து காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விசாரணையில், தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை திருமணத்திற்கு எடுத்துச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நிக்கி ஒப்புக்கொண்டாா்.
பின்னா் துப்பாக்கியை தனது நண்பா் அபிஷேக்கிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து, அவா் தொடா்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினாா். அபிஷேக் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு நபரை காவல் துறையினா் ஏற்கெனவே கைது செய்தனா்.
அவா்கள் மீது பிஎன்எஸ் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அபிஷேக் மீது ஏற்கெனவே காஜியாபாத்தில் குற்றவியல் வழக்கு உள்ளது. அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś