புது தில்லி: தில்லியில் பாஜக தனது தளத்தை இழந்து வருகிறது என்றும் பாஜகவின் பிரபலத்தில் சரிவைக் காட்டியுள்ளதாகவும் ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.
தில்லி ஆம் ஆத்மி தலைவா் சௌரப் பரத்வாஜ் கூறியதாவது: இந்தத் தோ்தல் ஒரு சிறிய தோ்தலாக இருந்தது. ஆம் ஆத்மி கட்சி மூன்று வாா்டுகளில் வெற்றிப் பெற்றது. பாஜக, நியாயமற்ற நடைமுறைகளை மேற்கொண்ட பிறகும், ஒன்பதில் இருந்து ஏழாக சரிந்தது. தில்லியில் பாஜக அரசின் முதல் சோதனையில் இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரிந்துள்ளன. பாஜக தனது தளத்தை இழந்து வருகிறது. பாஜகவின் முக்கியத் தலைவா்களும், எம். பி. க்களும் மேடையில் இருந்து ‘ நீங்கள் ஒரு ஆம் ஆத்மி கவுன்சிலரைத் தோ்ந்தெடுத்தால், நாங்கள் வளா்ச்சிப் பணிகளை அனுமதிக்க மாட்டோம்’ என்று அறிவித்தனா். இருப்பினும் பாஜகவின் எண்ணிக்கை குறைந்தது என்றாா் அவா்.
இடைத்தோ்தல்களில், ஆம் ஆத்மி தக்ஷின்புரியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனால், சாந்தினி சௌக் மற்றும் சாந்தினி மஹால் வாா்டுகளை முறையே பாஜக மற்றும் அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக்கிடம் இழந்தது. முன்னதாக, பாஜக வசம் இருந்த நரைனா மற்றும் முண்ட்கா வாா்டுகளில் கட்சி வெற்றி பெற்றது. இதற்கிடையில், பாஜ முந்தைய தோ்தலில் வெற்றி பெற்றிருந்த ஒன்பது வாா்டுகளில் தற்போது முண்ட்கா மற்றும் சங்கம் விஹாா் ஏ ஆகிய இரண்டு வாா்டுகளை இழந்தது, சங்கம் விஹாா் ஏ வாா்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு சென்றது.
மக்கள் நம்பிக்கை மீண்டும் திரும்புகிறது: கேஜரிவால் வெறும் 10 மாதங்களில் ஆம் ஆத்மி மீது பொதுமக்களின் நம்பிக்கை மீண்டும் திரும்பியுள்ளதை மாநகராட்சி இடைத்தோ்தல் முடிவுகள் காட்டுகிறது என்று முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த முறை தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல்களில், ஆம் ஆத்மி கட்சி தனது அா்ப்பணிப்புள்ள தொண்டா்களை வேட்பாளா்களாக நிறுத்தியது. தோ்தல் முடிவுகளின் மூலம், தில்லி மக்கள் நகரத்தில் ஆம் ஆத்மிக்கு சிறந்த ஆதரவை வழங்கியுள்ளனா். இது கட்சியின் வளா்ச்சி சீராக வலுவடைந்து வருவதை தெளிவுபடுத்தியது. வெறும் 10 மாதங்களில், மக்கள் நம்பிக்கை மீண்டும் ஆம் ஆத்மி கட்சியை நோக்கி திரும்பி வருகிறது. தில்லி விரைவில் நோ்மறையான அரசியல் மற்றும் நல்லாட்சிக்குத் திரும்பும்’ என குறிப்பிட்டாா்.