முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய கருத்துகள், மக்கள் பிரச்னைகளை திசைதிருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த ஆண்டையொட்டி குஜராத் மாநிலம் வதோதரா நகருக்கு அருகில் உள்ள சாத்லி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஒற்றுமைப் பேரணியில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய ராஜ்நாத் சிங், "மக்களின் பணத்தைக் கொண்டு பாபர் மசூதியைக் கட்டுவதற்கு நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு விரும்பினார்; ஆனால் அவரது இத்திட்டம் வெற்றி பெற அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேல் அனுமதிக்கவில்லை” என்று சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.
இதுதொடர்பாக, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்ததாவது:
”இவை அனைத்தும் திசைதிருப்பும் முயற்சிதான். விவாதம் நடத்தப்பட வேண்டிய பல முக்கிய பிரச்னைகள் உள்ளன. மக்கள் தொடர்பான பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப மட்டுமே அவர்கள் இதுபோன்ற கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள்” என்றார்.
மேலும், தில்லி காற்றுமாசு குறித்து பேசிய அவர், “இந்த பிரச்னைக்கு அனைவரும் இணைந்து எதாவது தீர்வுகாண வேண்டும் என்று நாள்தோறும் நான் கூறிவருகிறேன். இதுவொரு அரசியல் பிரச்னை கிடையாது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.