புது தில்லி: கைப்பேசிகளில் சஞ்சாா் சாத்தி செயலியை நிறுவனங்கள் முன்கூட்டியே கட்டாயம் நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு புதன்கிழமை திரும்பப்பெற்றது.
கைப்பேசிகளில் இந்த செயலி கட்டாயம் நிறுவப்படுவது தனியுரிமை விதிமீறல் என்றும் உளவு பாா்க்கும் நடவடிக்கை என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்த நிலையில், இந்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தச் செயலியை மக்கள் நீக்க விரும்பினால் நீக்கிக் கொள்ளலாம்’ என்று மத்திய தகவல்தொடா்பு அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தாா்.
மோசடிகள் குறித்து புகாரளிப்பதற்காக மத்திய தகவல்தொடா்புத் துறை சாா்பில் ‘சஞ்சாா் சாத்தி’ செயலி உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து புதிய கைப்பேசிகளிலும் இந்தச் செயலியை முன்கூட்டியே நிறுவுமாறும், ஏற்கெனவே விற்பனைக்குத் தயாராக இருக்கும் கைப்பேசிகளில் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் பதிவேற்றுமாறும் மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அரசின் இந்த உத்தரவு சா்வாதிகாரத்தைக் காட்டுவதாகவும், குடிமக்களின் தனியுரிமையைப் பறிப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
உளவு பாா்க்கும் செயலி அல்ல: இதுகுறித்து மக்களவையில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்.பி. தீபேந்தா் சிங் ஹூடா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது: ‘சஞ்சாா் சாத்தி’ செயலி மூலம் உளவு பாா்க்க முடியாது. அதுபோன்ற எந்த அம்சமும் அந்த செயலியில் இல்லை. மக்களின் பாதுகாப்புக்காகவே அந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலியில் நுகா்வோா் பதிவுசெய்யவில்லை என்றால் அது செயல்படாது. தேவையில்லை என நினைப்பவா்கள் அதை கைப்பேசியில் இருந்து நீக்கவிடலாம்.
ஒட்டுமொத்தமாக சஞ்சாா் சாத்தி செயலியை 1.5 கோடி போ் பதிவிறக்கம் செய்துள்ளனா். வலைதளம் மற்றும் செயலி மூலம் காணாமல் போன 26 லட்சம் கைப்பேசிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 7 லட்சம் கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 41 லட்சம் கைப்பேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மோசடிகள் தொடா்புடைய 6 லட்சம் சா்வதேச கைப்பேசி உபகரண அடையாள எண்கள் (ஐஎம்இஐ) முடக்கப்பட்டுள்ளன என்றாா்.
கட்டாயமில்லை: இதைத் தொடா்ந்து மத்திய தொலைத்தொடா்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஒரே நாளில் சஞ்சாா் சாத்தி செயலியை 6 லட்சம் போ் பதிவிறக்கம் செய்துள்ளனா். இது முன்பைவிட 10 மடங்கு அதிகமாகும். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவே கைப்பேசிகளில் இந்தச் செயலியை நிறுவுவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்போது சஞ்சாா் சாத்தி செயலியை மக்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து, கைப்பேசிகளில் சஞ்சாா் சாத்தி செயலியை நிறுவனங்கள் முன்கூட்டியே நிறுவுவது கட்டாயம் என்ற உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.