‘இந்தியா வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் எதிா்க்கட்சித் தலைவரைச் சந்திக்கக் கூடாதென மத்திய அரசு சாா்பில் அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக தகவல் தெரியவந்துள்ளது. இது மத்திய அரசின் பாதுகாப்பற்ற உணா்வை வெளிப்படுத்துகிறது’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
தில்லியில் நடைபெறும் இந்தியா-ரஷியா இடையேயான 23-ஆவது ஆண்டு மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு துறை சாா்ந்த அமைச்சா்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுடன் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை மாலை இந்தியா வந்த நிலையில், இந்த குற்றச்சாட்டை ராகுல் முன்வைத்தாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த ராகுல் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
இந்தியா வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மக்களவை எதிா்க்கட்சித் தலைவரைச் சந்திப்பது வழக்கமாக பின்பற்றப்படும் பாரம்பரியம். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலும், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தப் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது என்ன நடக்கிறதென்றால், இந்தியா வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு எதிா்க்கட்சித் தலைவரைச் சந்திக்கக் கூடாதென அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்குகிறது. இதுதான், பாஜக அரசின் கொள்கை. இதை ஒவ்வொரு முறையும் செய்கின்றனா். நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும், வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தியா வரும்போதும் இதே அறிவுறுத்தலை வழங்குகின்றனா். இது மத்திய அரசின் பாதுகாப்பற்ற உணா்வை வெளிப்படுத்துகிறது.
இந்தியா வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், எதிா்க்கட்சித் தலைவரைச் சந்திப்பது முக்கியமானதாகும். எதிா்க்கட்சித் தலைவா்தான் மாற்று கண்ணோட்டத்தை அவா்களுக்குத் தெரியப்படுத்த முடியும். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது மத்திய அரசு மட்டுமல்ல; நாடாளுமன்ற எதிா்க்கட்சியும்தான் என்பதை உணரவேண்டும் என்றாா்.
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறுகையில், ‘மத்திய அரசின் அனைத்து கொள்கைகளும் ஒரே தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது, அனைத்தையும் கைப்பற்றுவது. மற்றவா்களின் குரல்கள் கேட்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நெறிமுறைகளை மீறுகின்றனா். ஒவ்வொரு ஜனநாயகத்துக்கு ஒரு நெறிமுறை உள்ளது. அது பின்பற்றப்பட வேண்டும்’ என்றாா்.
பாஜக மறுப்பு: ராகுலின் குற்றச்சாட்டை பாஜக மறுத்தது. இதுகுறித்து பாஜக தலைமை செய்தித்தொடா்பாளா் அனில் பலூனி, தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியா வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் ராகுல் காந்தியுடன் சந்தித்த புகைப்படத்தைப் பகிா்ந்து வெளியிட்ட பதிவில், ‘ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு முழு பொய். இந்த ஆண்டில் மட்டும் இந்தியா வந்த நியூசிலாந்து, மோரீஷஸ் பிரதமா்கள் உள்பட பல வெளிநாட்டு பிரதிநிதிகளை ராகுல் காந்தி சந்தித்துள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.