புது தில்லி: காற்று மாசுபாட்டிற்காக நாம் நமது ஆரோக்கியம் மற்றும் பொருளாதார பாதிப்பு என நாம் கொடுக்கும் விலை மிகப்பெரியதாக உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் காற்று மாசுபாடு பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இது பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பாதிப்புகளை உருவாக்கி வருகிறது.
இந்த நிலையில், இதனைச் சுட்டிக்காட்டி மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
காற்று மாசுபாட்டிற்காக நாம் நமது ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் என பெரும் விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இது கோடிக்கணக்கான இந்தியா்களுக்கு மிகப்பெரிய சுமையாகவும், பிரச்னையாகவும் மாறியுள்ளது. சாமானிய இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் இந்தச் சுமையை சுமந்து வருகின்றனர்.
காற்று மாசுபாட்டினால் குழந்தைகளும், முதியவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் தொடங்கி அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. அடுத்த குளிர்காலம் வரும் வரை இந்த நெருக்கடியை நாம் மறந்துவிட முடியாது.
இதில் இருந்து மீள வேண்டுமானால் முதல் படியாக, முதலில் நாம் இதற்கு எதிராக ஒருமித்து குரல் எழுப்புவதுதான். எனவே, காற்று மாசுபாடு உங்கள் பகுதிகளில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது, எப்படி பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள் என்பது குறித்தும், காற்று மாசுபாடு பிரச்னை உங்களையும் உங்கள் அன்புக்குரியவா்களையும் எவ்வாறு பாதித்துள்ளது என்பதையும் https://rahulgandhi.in/awaazbharatki என்ற வலைதளத்தில் நீங்கள் எனக்கு நேரடியாக எழுதி அனுப்பலாம். உங்கள் குரலுக்கு மதிப்பு உண்டு, அதை வெளிக்கொணர்வது எனது கடமை. உங்கள் சாா்பில் நான் கோரிக்கைகளை மக்களவையில் எழுப்புவேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.