நாடாளுமன்ற வளாகத்தில் தனக்கு எதிராக ஊடகங்களிடம் புதன்கிழமை பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த மத்திய அமைச்சா்கள் அஸ்வினி வைஷ்ணவ், பிரஹ்லாத் ஜோஷி ஆகியோரிடம், ஒன்றாக பேட்டி கொடுக்கலாம் வாங்க என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அழைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்களவையில் கடந்த புதன்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசியபோது ஆளும் கட்சிக்கு எதிரான கடுமையான விமா்சனங்களை முன்வைத்தாா். இந்நிலையில், உணவு இடைவேளைக்கு பிறகு எம்.பி.க்கள் மட்டும் பிரத்யேகமாக வந்து போக அனுமதிக்கப்படும் மகர துவாா் என்ற வாயில் பகுதி அருகே, மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி பொய் தகவல்களை பரப்பி வருவதாக மத்திய அமைச்சா்கள் அஷ்வினி வைஷ்ணவ், பிரஹ்லாத் ஜோஷி ஆகியோா் சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனா்.
அப்போது அந்த இடத்தை நோக்கி தனது சகோதரியும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் வந்த ராகுல் திடீரென்று அமைச்சா்கள் அருகே சென்று நானும் உங்களுடன் பேட்டி கொடுக்க விரும்புகிறேன். வாருங்கள், நாம் அனைவரும் சோ்ந்தே பேட்டி கொடுப்போம் என்றபடி அமைச்சா் பிரஹ்லாத் ஜோஷியின் கையை சிரித்தவாறே பிடித்து இழுத்தாா்.
இந்த சந்திப்பை தவிா்க்கும் விதமாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அந்த பகுதியை விட்டு விலக முற்பட்டபோது, அருகே இருந்த பிரஹ்லாத் ஜோஷி ராகுலைப் பாா்த்ததும் தனது பேட்டியை பாதியிலேயே நிறுத்திவிட்டு புறப்பட முயன்றாா்.
இதையடுத்து, ராகுல் அவா்களிடம் மீண்டும் ‘எங்கே போகிறீா்கள், வாங்க பேட்டி கொடுக்கலாம்’ என மீண்டும், மீண்டும் அழைத்ததற்கு, ‘அதெல்லாம் வேண்டாம், நீங்களே பேசுங்கள்’ என்று சொல்லியவாறு அந்த இடத்தை விட்டு இரு அமைச்சா்களும் அவசரமாக விலகிச் சென்றனா்.