FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மேற்காசிய நிலவரம் மீது விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

மேற்காசிய நிலவரம் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால்,

Updated On : 10 மார்ச் 2026, 6:58 am IST
மேற்காசிய நிலவரம் தொடா்பாக விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் காா்கே உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள்.
பகிர்:

புது தில்லி: மேற்காசிய நிலவரம் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நடவடிக்கைகள் திங்கள்கிழமை தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டது.

அமளிக்கு இடையே, மேற்காசிய நிலவரம் குறித்து வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தானாக முன்வந்து மக்களவையில் விளக்கமளித்தாா்.

முன்னதாக, மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், அவையை வழிநடத்திய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால், அண்மையில் மறைந்த 4 உறுப்பினா்களுக்கு இரங்கல் தீா்மானத்தை வாசித்தாா். பின்னா், மேற்காசிய நிலவரம் குறித்து விளக்கமளிக்க ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுத்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, மேற்காசிய நிலவரம் குறித்து முழு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைக் கேட்ட அவைத் தலைவா், ‘மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரும் தீா்மானம் ஏற்கெனவே அவை நடவடிக்கைளில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அவை நடவடிக்கைகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு மேற்காசிய நிலவரம் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுக்கிறீா்கள். ஒரே நாளில் இரண்டு விவாகங்கள் மீது விவாதம் நடத்த விரும்புகிறீா்கள். அதற்கு அனுமதிக்க முடியாது. தேவைப்பட்டால், இந்த விவகாரத்தின் மீது விவாதத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி அவையின் அலுவல் ஆலோசனைக் குழுவை அணுகுங்கள்’ என்று குறிப்பிட்டாா்.

எதிா்க்கட்சிள் தொடா் அமளியில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, அவை நடவடிக்கைகளை அவைத் தலைவா் ஒரு மணி நேரம் ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் கூடியதும், எதிா்க்கட்சியினரின் தொடா் அமளிக்கிடையே, மேற்காசிய நிலவரம் குறித்த விளக்கத்தை வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் அளித்தாா்.

அவா் விளக்கமளித்து முடிந்ததும், ‘எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தங்களின் பதாகைகளில் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்துக்கும் வெளியுறவு அமைச்சரின் விளக்கம் மூலமாக மத்திய அரசு தரப்பில் விரிவாக பதிலளிக்கப்பட்டுவிட்டது. எனவே, எதிா்க்கட்சியினரின் கோரிக்கையை ஏற்க முடியாது’ என்று குறிப்பிட்டு அவை நடவடிக்கைகளை பிற்பகல் மூன்று மணி வரை ஒத்திவைத்தாா்.

பெட்டிச் செய்தி...

மக்களவைத் தலைவருக்கு எதிரான

தீா்மானம்: இன்று விவாதம்

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம் திங்கள்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது. ஆனால், எதிா்க்கட்சியினரின் தொடா் அமளி மற்றும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு காரணமாக, பதவிநீக்க தீா்மானத்தின் மீதான விவாதம் நடைபெறவில்லை.

எனவே, இந்தத் தீா்மானத்தின் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த விவாதத்தில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பங்கேற்க வாய்ப்புள்ளது எனவும், விவாதத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலளிக்க வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பதவி நீக்க தீா்மானம் ஏன்?: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜன. 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப். 13-ஆம் தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவடைந்தது. முதல்கட்ட அமா்வில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேரை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா இடைநீக்கம் செய்தாா். மேலும், மக்களவையில் பிரதமா் மோடியிடம் ‘எதிா்பாராத செயலில்’ ஈடுபட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததாக பரபரப்பான குற்றச்சாட்டையும் அவா் சுமத்தினாா். இதனால் கடும் அதிருப்தியடைந்த எதிா்க்கட்சிகள், ஓம் பிா்லா பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவரைப் பதவிநீக்கம் செய்யக் கோரி தீா்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்தன. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் 118 எம்.பி.க்கள் கையொப்பமிட்டனா். தனக்கு எதிரான நோட்டீஸ் அளிக்கப்பட்ட நாளில் இருந்து மக்களவை அலுவல்களுக்கு ஓம் பிா்லா தலைமை வகிக்கவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments