இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு விமான சேவையை வழங்கும் மற்ற நிறுவனங்கள் அதன் டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
நாடு முழுவதும் தொடர்ந்து நான்காவது நாளாக இண்டிகோ விமான சேவை வெள்ளிக்கிழமையும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக விமானிகளுக்கு குறிப்பிட்ட ஓய்வு அளிக்கும்பொருட்டு ‘விமானப் பணி நேரம் மற்றும் ஓய்வு விதிகளை’ (எஃப்டிடிஎல்) மத்திய அரசு கொண்டு வந்தது.
இதன்படி, விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கு கட்டாய ஓய்வு நேரம் உள்பட நாளுக்கு 8 மணி நேரம், வாரத்துக்கு 35 மணி நேரம், மாதத்துக்கு 125 மணி நேரம், ஆண்டுக்கு 1,000 மணி நேரம் மட்டுமே பணி நேரமாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனத்தில் போதிய விமானிகள் எண்ணிக்கை இல்லாததால் இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டும் வருகின்றன. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் குவிந்துள்ள இண்டிகோ விமானப் பயணிகளால் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி உள்நாட்டு விமான சேவையை வழங்கும் மற்ற நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
அதன்படி, சென்னை-கோவை இடையேயான விமான கட்டணம் ரூ.60,000, சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான கட்டணம் ரூ.41,000, சென்னை-பெங்களூரு விமான கட்டணம் ரூ.17,000, சென்னை-தில்லி விமான கட்டணம் ரூ.36,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இண்டிகோ விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் விமான கட்டண உயர்வு பயணிகளுக்கு மேலும் இன்னல்களை தந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.