ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகள் அனைத்துக்குமான கட்டணம் பயணிகளுக்கு திரும்ப அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கும் இண்டிகோ நிறுவனம் மன்னிப்புக் கோரியிருக்கிறது.
இண்டிகோ விமான நிறுவனத்தில் டிக்கெட் எடுத்திருக்கும் பயணிகள், விமானத்தின் நிலை மற்றும் அது குறித்த அறிவிப்புகள் ஏதேனும் வந்திருக்கிறதா என்பதை இணையதளம் அல்லது செய்திகள் மூலம் அறிந்து கொண்ட பிறகு விமான நிலையத்துக்குப் புறப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
விமான நிலையம் வந்த பிறகு, விமான சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து இது தவிர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து நான்காவது நாளாக இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு விமான நிலையங்களிலிருந்து புறப்படும் விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் குவிந்து வருகிறார்கள். இதனால், பல விமான நிலையங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இண்டிகோ விமான சேவை நிறுவனத்தில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்திருந்தவர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம். கடந்த சில நாள்களாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது. இது ஒரே நாளில் தீர்க்கப்படும் விவகாரம் அல்ல.
எங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு உதவுகிறோம், எங்கள் விமான சேவையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயற்சிகள் செய்து வருகிறோம்.
கடந்த ஒரு சில நாள்களாக விமாங்களை இயக்குவதில் பல செயல்முறைச் சிக்கல்களை சந்தித்துள்ளோம். பல பயணிகளின் புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பலரும் விமான நிலையங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள், அதிக நேரம் காத்திருக்கிறீர்கள்.
இன்று அதிகப்படியான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை, நிலைமை ஓரளவு சரியாக இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இது குறித்து விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடமும் பேசி வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கான கட்டணங்கள் திரும்ப அளிக்கப்படும்.
டிச. 5 முதல் 15 வரை ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு கட்டணங்களை திரும்ப அளிப்பது, விமானப் பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தங்கும் வசதி மற்றும் விமான நிலையங்களுக்கு வருவதற்கான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதிக நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதற்கு மன்னிக்கவும், பயணிகளுக்கான கட்டுப்பாட்டு அறைகளின் திறனை அதிகரித்து வருகிறோம்.
விமானத்தின் நிலையை அறிதல் உள்ளிட்டவற்றுக்கு உதவுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மீண்டும் மன்னிப்புக் கோருகிறோம் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.