ஹரியாணாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய ஒளி மின் அமைப்புகளை நிறுவ வேண்டுமென அம்மாநில முதல்வர் நாயப் சிங் சைனி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்துதல் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் மின் துறை மீதான நிதி நிலை அறிக்கை குறித்து முதல்வர் நாயப் சிங் சைனி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நையாப் சிங் சைனி பேசும்போது, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு வளாகங்களிலும் மேல்நிலை சூரிய ஆற்றல் மின் அமைப்புகளை நிறுவ அதிகாரிகளுக்கு அறுவுறுத்தினார். மாநிலத்தில் வீடுகளில் சூரிய ஆற்றல் மின் அமைப்புகளை நிறுவுவதை அதிகாரிகள் விரிவுபடுத்திடவும் அறிவுறுத்தினார்.
மேலும், சூரிய ஆற்றல் பூங்காக்களை ஹரியாணாவில் அமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொது இடங்களில், அதிலும் குறிப்பாக மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மக்களின் பாதுகாப்பு கருதி, பழைய மற்றும் மோசமான நிலையில் இருக்கும் மின் கம்பங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் பேசிய ஹரியாணா மின்சார உற்பத்தி கழகத்தின் தலைவர் ஷியாமல் மிஸ்ரா, 2027-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் ஹரியாணாவில் 2 லட்சத்து 22 ஆயிரம் சூரிய ஆற்றல் மின் அமைப்புகளை நிறுவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.