விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதைக் குறித்து இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) கடந்த நவம்பா் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், இந்த விதிமுறை மாற்றங்களுக்கு இண்டிகோ போதிய திட்டமிடாததால், அந்நிறுவனத்தில் விமானிகளின் பற்றாக்குறை ஏற்பட்டு, கடந்த சில நாள்களாக அன்றாட விமான சேவைகள் 5-ஆவது நாளாக இன்றும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், விமான சேவை சீராக தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருப்பதாக இண்டிகோ நிறுவனம் தரப்பிலிருந்து சனிக்கிழமை(டிச. 6) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோவின் 550 விமானங்கள் கடந்த வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமை 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் என நூற்றுக்கணக்கான விமானங்கள் அடுத்தடுத்து நாள்களில் ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் நாடு முழுவதும் விமான நிலையங்களில் 3 நாள்கள் வரை காத்திருக்கும் நிலையும், உடைமைகள் தொலைந்த புகாா்களும் எழுந்தன.
இந்த நிலையில், இது தொடர்பாக இன்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விமான சேவையை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவர இண்டிகோ உறுதிபட செயலாற்றி வருகிறது. எங்களது குழுக்கள் இந்தக் கடினச் சூழலில் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இண்டிகோ விமான நிறுவனத்தில் விமான ரத்து செயல்பாடு கடந்த நாள்களைவிட வெகுவாகக் குறைந்து இன்று(டிச. 6) 850-க்கும் கீழ் சென்றது. அடுத்த சில நாள்களில் இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க நாங்கள் செயலாற்றி வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூறப்பட்டுள்ளதாவது; ‘பயணிகளின் கட்டணங்களைத் திரும்பச் செலுத்துதலுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறோம். பயணிகளின் அசௌகரியத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளைக் கையாள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் எங்களது கூட்டு நிறுவனங்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
விமானங்களின் இயக்கம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள பயணிகள் விமான நிலையங்களுக்குச் செல்லும் முன், கட்டாயம் https://www.goindigo.in/check-flight-status.html என்ற இணையதளத்தில் சென்று உடனுக்குடன் பதிவேற்றப்படும் தகவல்களை தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கட்டணத்தை திரும்பப் பெற பயணிகள், https://www.goindigo.in/refund.html என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளவும் அல்லது இண்டிகோவின் வாடிக்கையளர் சேவை அமைப்பை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.