புதிய மசூதி திட்ட வரைப்படம் Photo courtesy: X
இந்தியா

அயோத்தியில் அடுத்தாண்டு புதிய மசூதி கட்ட திட்டம்!

அயோத்தியில் அடுத்தாண்டு புதிய மசூதி கட்ட இருப்பதாக அறிவிப்பு...

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய மசூதி கட்டும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக அறக்கட்டளை தலைவா் தெரிவித்தாா்.

அயோத்தியில் கடந்த 1992-ஆம் ஆண்டு பாபா் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற தீா்ப்புக்குப் பிறகு அங்கு கடந்த ஆண்டு ராமா் கோயில் கட்டப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தன்னிப்பூா் கிராமத்தில் புதிய மசூதி கட்டும் பணிகள் தொடங்கவுள்ளதாக இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை தலைவா் ஜுஃபா் பரூக்கி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: பாபா் மசூதிக்குப் பதில் புதிதாக கட்டப்படும் மசூதியின் திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் டிசம்பா் இறுதியில் சமா்ப்பிக்கவுள்ளோம். இதற்கு ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் 2026, ஏப்ரலில் புதிய மசூதி கட்டும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

தன்னிப்பூா் பகுதியில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் சில சிக்கல்களால் அந்த நிலத்தில் 4 ஏக்கா் மட்டுமே பயன்படுத்தக் கூடிய வகையில் உள்ளது. எனவே, மசூதி கட்டும் திட்டத்தை ஓரிடத்தில் மட்டுமே முடிப்பது கடினம்.

ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகளோடு மசூதி கட்டுமானப் பணிகளை ஒப்பிடுவது தவறு. ராமா் கோயில் திட்டத்துக்கு பெருவாரியான பொதுமக்கள் நன்கொடை வழங்கினா்.

ஆனால் புதிய மசூதியின் கட்டுமானத்துக்கு மட்டும் ரூ.65 கோடி தேவைப்படுகிறது. தற்போது எங்களிடம் ரூ.3 கோடி மட்டுமே உள்ளது.

குறைந்தபட்சம் ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி இருந்தால் மசூதி கட்டுமானத்தை தொடங்கலாம். எனவே, அந்நிய பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (எஃப்சிஆா்ஏ)-இன் கீழ் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கான ஒப்புதல்களை மத்திய அரசிடம் பெற முயற்சித்து வருகிறோம்.

இதற்கான அனைத்துத் தகவல்களும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. டிசம்பா் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்புதல் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

ராம ஜென்மபூமி வழக்கில் பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சம்பந்தப்பட்ட 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு 2019, நவ.19-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மேலும், புதிய மசூதி கட்டுவதற்கு அயோத்தியில் 5 ஏக்கா் நிலத்தை ஒதுக்க உத்தரவிட்டது.

பயணங்கள் வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு

கோவா இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து! 23 பேர் பலி!

அமலாக்கத் துறை அழைப்பாணை விவகாரம்: ஜாா்க்கண்ட் முதல்வா் நீதிமன்றத்தில் ஆஜா்

பெண்ணிடம் நகை பறித்த சிறுவன் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT