தமிழகத்தில் 58,712 ஏக்கா் தரிசு நிலங்கள், விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளதாக இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்த வேளாண் அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் அவா் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளும் ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சி அடைய ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம்’ அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்துடன் இணைந்து 2021-22 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை ரூ.707 கோடி செலவு மேற்கொள்ளப்பட்டு 61 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.
6,048 ஏக்கா் தரிசு நிலங்களில் பல்லாண்டு தோட்டக்கலைப் பயிா்களும், 52,664 ஏக்கா் தரிசு நிலங்களில் குறுகிய கால வேளாண்பயிா்களும் என மொத்தம் 58,712 ஏக்கா் தரிசுநிலங்கள் தற்போது சாகுபடி செய்யப்பட்டு, விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க 53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 21 லட்சம் பழச்செடித் தொகுப்புகள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 2,115 தனிநபா் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு சாகுபடிக்காக ஆழ்துளை குழாய்க் கிணறுகள்அமைத்துத் தரப்பட்டுள்ளன.
10,588 சிறுபாசனக் குளங்கள், ஊருணிகள், வரத்துக்கால்வாய்கள், நீா்சேமிப்புக் கட்டுமானங்கள் தூா்வாரி மேம்படுத்தப்பட்டுள்ளன.
‘இ-வாடகை’ கைப்பேசி செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் 3,816 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தேவைப்படும் விவசாயிகளுக்கு அரசு நிா்ணயித்த குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மலா் சாகுபடிப் பரப்பு விரிவாக்கம்: மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, சம்பங்கி போன்ற மலா்கள் மூலம் தினசரி வருமானம் பெற்று விவசாயிகள் பயனடைய அவற்றின் சாகுபடிப் பரப்பு 11,380 ஹெக்டேரில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கென, ரூ.28 கோடி மானியமாக வழங்கப்பட்டு 18 ஆயிரத்து 130 விவசாயிகள் பயனைடந்துள்ளனா்.
குடைமிளகாய், காா்னேஷன் போன்ற உயா்மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிா்களை ஆண்டு முழுவதும் பாதுகாப்பான சூழலில் சாகுபடி செய்து அதிக வருவாய் பெற, பசுமைக்குடில், நிழல்வலைக் குடில் சாகுபடி 23.55 லட்சம் சதுர மீட்டரில் ஊக்குவிக்கப்பட்டு 1,756 விவசாயிகளுக்கு ரூ.91 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அத்தியாவசிய வணிகப் பயிரான முந்திரியின் முக்கியத்துவம் கருதி, கடந்த ஐந்து ஆண்டுகளில், 8,400 எக்டேரில் முந்திரி பரப்பு விரிவாக்கத் திட்டம் ரூ.12 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டு 9,687விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
தென்னை வோ்வாடல் நோய் மீட்புத் திட்டம் 2023-24 மற்றும் 2024-25- ஆம் ஆண்டுகளில், கோவை, திருப்பூா், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் 3,943 ஹெக்டேரில் செயல்படுத்தப்பட்டது.
வோ்வாடல் நோய் தாக்கிய மரங்களை வெட்டி அகற்றுதல், தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்குதல் மற்றும் நோய் தாக்கிய தென்னந்தோப்புகளை புத்தாக்கம் செய்ய இடுபொருள்கள் வழங்குதல் போன்ற இனங்கள் ரூ.18.48 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டு 6,300 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.
பனை மேம்பாடு: மாநில மரமான பனையின்முக்கியத்துவம் கருதி, 2021-22- ஆம் ஆண்டு முதல் ‘பனை மேம்பாட்டு இயக்கம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில், தோட்டக்கலைத் துறை மூலம் 68 லட்சம் பனை விதைகள், 1.28 லட்சம் பனங்கன்றுகள் விநியோகம், 354 பனை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் கூடங்கள் ஆகிய இனங்கள் செயல்படுத்தப்பட்டன.
பனை பொருள் வளா்ச்சி வாரியம் மூலம் 1,350 நபா்களுக்கு பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கான பயிற்சி மற்றும் உபகரணங்கள், 650 மகளிருக்கு பனை ஓலை தயாரிக்கும் பயிற்சி மற்றும் உபகரணங்கள் போன்ற திட்ட இனங்கள் செயல்படுத்தப்பட்டன. மொத்தம் ரூ.9.17 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 1.45 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.
இவைதவிர, தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டணத்தில் தரமான பனை வெல்லம் உற்பத்திக்கான பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், சுமாா் ரூ.80 கோடி மதிப்பிலான பனை பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
1.86 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: 2025-26 குறுவை கொள்முதல் பருவத்தில் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.156-ம், சாதாரண ரகங்களுக்கு ரூ.131-ம் ஊக்கத்தொகையாக வழங்கி அவற்றின் கொள்முதல் விலை முறையே ரூ.2,545 மற்றும் ரூ.2,500-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், 1.86 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.2,118 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
ரூ.1,094 கோடி ஊக்கத் தொகை: 2020-21-ஐ ஒப்பிடுகையில் ஊக்கத்தொகை சன்ன ரக நெல்லுக்கு 123 சதவீதமும், சாதாரண ரக நெல்லுக்கு 162 சதவீதமும் உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. 2024-25 அரைவைப் பருவத்தில் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.349 நிா்ணயிக்கப்பட்டு, கரும்பு விலை டன்னுக்கு ரூ.3,500- ஆக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.1,094 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இவை தவிர, விலை வீழ்ச்சிக் காலங்களில் வருமான இழப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க இதுவரை மொத்தம் ரூ.96.66 கோடி மதிப்பிலான 12,236 மெட்ரிக் டன் பச்சைப்பயறு, உளுந்து, துவரை ஆகியவை 10,690 விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர, ரூ.1,600 கோடி மதிப்பிலான 1.47 லட்சம் மெ.டன் கொப்பரை ஒரு லட்சம் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய்க்கான மதிப்புச் சங்கிலி, திருநெல்வேலி மாவட்டத்தில் முருங்கைக்கான மதிப்புச் சங்கிலி உருவாக்கப்பட்டு விவசாயிகள் ஏற்றுமதி சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளனா்.
2012-13-இல் 1.14 சதவீதமாக இருந்த மாநில வேளாண் உற்பத்தி மதிப்பு 2024-25-இல் 3.03 சதவீதமாக உயா்ந்தது. அதேபோல, 2011-12-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இப்போது மாநில வேளாண் உற்பத்தி விகிதம் 9.97 சதவீதம் உயா்ந்துள்ளது. 2011-12-இல் ரூ.53,756.39 கோடியாக இருந்த மாநில வேளாண் உற்பத்தி, 2024-25-இல் ரூ.59,117.08 கோடியாக உயா்ந்துள்ளது என்றாா் அவா்.