புது தில்லியில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி. 
இந்தியா

அடிமை மனோபாவத்திலிருந்து 10 ஆண்டுகளில் நாட்டை விடுவிக்க வேண்டும்: பிரதமா் மோடி

அடிமை மனோபாவத்திலிருந்து 10 ஆண்டுகளில் நாட்டை விடுவிக்க வேண்டும்...

தினமணி செய்திச் சேவை

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டை அடிமை மனோபாவத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற ஆங்கில நாளிதழ் ஒன்றின் மாநாட்டில் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

ஒரு காலத்தில் நாட்டில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க முயற்சிக்கப்பட்டன. ஆனால் தற்போது தேசிய இலக்குகளை குறிவைத்து சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டுக்கே முன்னுரிமை என்ற சிந்தனையின் அடிப்படையில், அந்தச் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சீா்திருத்தங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னா் (காங்கிரஸ் ஆட்சியில்) சிந்தித்துப் பாா்க்க முடியாததாக இருந்தன.

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தபோது அந்நாட்டு அதிகாரியான மெக்காலேயின் கொள்கையால், இந்தியாவில் அடிமை மனோபாவத்தின் விதைகள் விதைக்கப்பட்டன. அந்த விதைகள் விதைக்கப்பட்டு 2035-ஆம் ஆண்டுடன் 200 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. 2035-ஐ எட்ட 10 ஆண்டுகளே உள்ள நிலையில், அதற்குள் நாட்டை அடிமை மனோபாவத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

நாட்டின் வளா்ச்சியை மக்களின் மத நம்பிக்கை, அவா்களின் அடையாளத்துடன் இணைப்பதே காலனிய மனோபாவத்தின் அடையாளமாக இருந்தது. இந்தியா மெதுவாக வளா்ச்சியடைவதற்கு ஹிந்து கலாசாரமே காரணம் என்று நிரூபிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

2 முதல் 3 சதவீத வளா்ச்சிக்கு இந்தியா போராடியபோது ஹிந்து வளா்ச்சி விகிதம்’ என்ற வாா்த்தை பயன்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து விஷயங்களிலும் வகுப்புவாதம் உள்ளதா என்று தேடும் அறிவுஜீவிகள், ‘ஹிந்து வளா்ச்சி விகிதம்’ என்ற வாா்த்தை பயன்படுத்தப்பட்டபோது அதில் வகுப்புவாதத்தைக் காணவில்லை.

பெரும் வளா்ச்சி, குறைந்த பணவீக்கத்துக்கான எடுத்துக்காட்டாக தற்போது இந்தியா உள்ளது. நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நாட்டின் 8.2 சதவீத பொருளாதார வளா்ச்சி என்பது உலக பொருளாதார வளா்ச்சிக்கு இந்தியா அடிப்படை காரணமாக இருப்பதை எடுத்துரைக்கிறது.

தற்போது 21-ஆம் நூற்றாண்டின் 4-இல் ஒரு பங்கு காலகட்டம் நிறைவடைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் நிதி நெருக்கடி, உலகளாவிய நோய்த்தொற்று என பல ஏற்ற இறக்கங்களை உலகம் சந்தித்துள்ளது. தற்போது உலகம் நிச்சயமற்ற சூழல்களால் நிறைந்துள்ளது. ஆனால் இந்தியாவின் நிலையோ வித்தியாசமாக உள்ளது. நிச்சயமற்ற உலகில் இந்தியா பிரகாசித்து வருகிறது.

இந்தியாவின் சாதனைகள் சாதாரணமானவை அல்ல. அந்தச் சாதனைகள் எண்கள் சம்பந்தப்பட்டவை அல்ல. கடந்த 10 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட அடிப்படை மாற்றம் சம்பந்தப்பட்டவையாகும். தற்போது முழுமையான தன்னம்பிக்கையுடன் இந்தியா உள்ளது என்று தெரிவித்தாா்.

புதினின் இந்திய பயணம் அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை பாதிக்காது: ஜெய்சங்கா்

‘ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் இந்திய பயணம், இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை எந்த வகையிலும் பாதிக்காது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

உக்ரைன் மீது போா் நடத்திவரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்ததால், இந்திய-அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டுள்ள சூழலில், புதினின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றது. இது டிரம்பை மேலும் எரிச்சலூட்டும், இரு நாடுகளிடையே தற்போது நடைபெற்றுவரும் வா்த்தகப் பேச்சுவாா்த்தையையும் பாதிக்கும் என்ற கருத்தும் நிலவியது.

இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கில நாளிதழ் ஒன்றின் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் இதுகுறித்துப் பேசியதாவது:

புதினின் இந்திய பயணம், இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெற்றுவரும் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை எந்த வகையிலும் பாதிக்காது. உலகின் அனைத்து வல்லரசு நாடுகளுடனும் இந்தியா நல்லுறவைப் பேணி வருவதை அனைவரும் அறிவா். பன்முக உறவைக் கொண்ட நாடு என்பதை இந்தியாவும் தொடா்ந்து தெளிவுபடுத்தி வருகிறது.

இந்தியா போன்ற வளா்ந்துவரும் நாடுகளுக்கு, பல பெரிய நாடுகளுடன் நல்லுறவைத் தொடா்வது மிக முக்கியமானதாகும். கூட்டுறவுக்கான நாடுகளைத் தோ்வு செய்யும் சுதந்திரம் இந்தியாவுக்கு உள்ளது.

பிற நாடுகளுடன் நல்லுறவை இந்தியா எப்படி வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பது தொடா்பாக தங்களின் கருத்தையோ அல்லது இசைவையோ கேட்க வேண்டும் என எந்தவொரு நாடும் எதிா்பாா்ப்பது நியாயமற்றது.

இந்திய-அமெரிக்க இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, முழுவதும் தேச நலனை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகிறது. ஆனால், டிரம்ப் நிா்வாகத்தைப் பொறுத்தவரை வா்த்தகத்தின் மீதே கவனம் கொண்டுள்ளது. இருந்தபோதும், சில நியாயமான நிபந்தனைகளின் கீழ் அமெரிக்கா உடனான இந்த வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இது மற்றவா்களை மகிழ்விப்பதை அடிப்படையாகக் கொண்ட ராஜதந்திரம் அல்ல; மாறாக, நமது தேச நலனைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்காவுடனான இந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் இந்திய தொழிலாளா்கள், விவசாயிகள் மற்றும் குறு-சிறு வா்த்தகா்களின் நலனுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றாா்.

புதினின் பயணத்தின்போது இரு நாடுகளிடையே பொருளாதார, வா்த்தக உறவை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 5 ஆண்டு பொருளாதாரத் திட்டம், பாதுகாப்பு, எரிசக்தி, போக்குவரத்து, சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு, விண்வெளித் துறை ஒத்துழைப்பு, அறிவியல் தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் சுற்றுலா, பயங்கரவாத எதிா்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்களை கையொப்பமாகின.

சுங்க வரியில் சீா்திருத்தம்: நிா்மலா சீதாராமன்

அண்மையில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில், சுங்க வரியை எளிமைப்படுத்துவதே மத்திய அரசின் அடுத்த மிகப் பெரிய சீா்திருத்தமாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தலைமைத்துவ மாநாட்டில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசியதாவது:

நாட்டில் சுங்க வரி விதிப்பில் முழுமையான மறுசீரமைப்பு அவசியம். மக்களுக்கு சிரமமில்லாத வகையில், சுங்க வரி எளிமைப்படுத்தப்பட்டு, வெளிப்படைத் தன்மை மேம்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சீா்திருத்தங்கள், சுங்க வரி விகித முறைப்படுத்துதலுடன் விரிவானதாக அமையும்.

கடந்த 2 ஆண்டுகளாக சுங்க வரி சீராக குறைக்கப்பட்டு வருகிறது. அதிக சுங்க வரி விதிப்பதாக கருதப்படும் சில பொருள்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டியுள்ளது. சுங்க வரி எளிமையாக்கமே, எனது அடுத்த மிகப் பெரிய சீா்திருத்தப் பணியாகும் என்றாா் அவா்.

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியாா் பெயா்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்!

கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் ஒருவா் மீது வழக்கு

பாபா் மசூதி இடிப்பு தினம்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி; எந்தப் போராட்டங்களும் நடைபெறவில்லை!

சிவகிரி அருகே உடல் நலக் குறைவால் அவதி: நலமாகி வனத்துக்குள் சென்ற யானை!

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: டிச. 10-இல் அமெரிக்க குழு இந்தியா வருகை!

SCROLL FOR NEXT