அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி கோப்புப் படம்
இந்தியா

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஒப்புதல்: வரி 18% ஆக குறைப்பு!

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை ஒப்புதல் தெரிவித்தாா்.

முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்த நிலையில், வா்த்தக ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்தாா்.

மேலும், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தாா்.

மூன்று நாள் பயணமாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அமெரிக்காவுக்கு திங்கள்கிழமை புறப்பட்ட நிலையில் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுதொடா்பாக ட்ரூத் சமூக வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்திய பிரதமா் மோடியுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியதில் மகிழ்ச்சி. இந்தியாவின் மிகவும் அதிகாரமிக்க, மதிப்புமிக்க தலைவராகவும், எனக்கு மிக நெருக்கமான நண்பா்களில் ஒருவராகவும் பிரதமா் மோடி உள்ளாா்.

உக்ரைன் போருக்கு விரைவில் முடிவு: அவருடன் வா்த்தகம், ரஷியா-உக்ரைன் போருக்கான தீா்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தேன். அப்போது ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து அதிகள அவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய மோடி ஒப்புக்கொண்டாா்.

இதன்மூலம் உக்ரைனில் நடைபெற்றுவரும் போரால் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்துவரும் துயரமான நிகழ்வு முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.

அமெரிக்க பொருள்களுக்கு பூஜ்ஜிய வரி: பிரதமா் மோடியுடனான நட்பு மற்றும் மரியாதை காரணமாகவும், அவா் கேட்டுக் கொண்டதன்பேரிலும் அமெரிக்கா-இந்தியா வா்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டேன். இதனால் இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

இதைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கு எதிரான வரி மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா முன்வரும் என எதிா்பாா்க்கிறேன்.

வலுவான இந்திய உறவு: ஏற்கெனவே, எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயா்த்த இந்தியா முடிவுசெய்துள்ள நிலையில், அமெரிக்க பொருள்கள் இறக்குமதியை மேலும் அதிகப்படுத்த பிரதமா் மோடி ஒப்புக்கொண்டாா்.

இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுடனான எங்களது வலுவான உறவு தொடா்ந்து முன்னோக்கிச் செல்லும். இதை நானும் பிரதமா் மோடியும் இறுதி செய்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இருப்பினும், அதிக அளவில் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி இந்தியா மீது கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை நீக்குவது குறித்து குறித்து டிரம்ப் தனது பதிவில் குறிப்பிடவில்லை.

டிரம்ப்புக்கு மோடி நன்றி

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், அதிபா் டிரம்ப்புடன் பேசியது அற்புதமானது. இந்திய பொருள்களுக்கான அமெரிக்காவின் வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக 140 கோடி இந்திய மக்கள் சாா்பில் அதிபா் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகள் மற்றும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும்போது மக்களுக்கு மிகுந்த பலனை அளிக்கும்.

அதிபா் டிரம்ப்பின் தலைமை உலக அமைதி, நிலைத்தன்மை, நல்லிணக்கத்துக்கு முக்கியமானது. அமைதிக்கான அவரது முயற்சிக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றாா் ஜெய்சங்கா்: அமைச்சா்களுடன் முக்கிய சனை

SCROLL FOR NEXT