இந்திய ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! வேளாண் அமைச்சரின் பதிவால் சர்ச்சை!
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து வேளாண் அமைச்சரின் பதிவால் சர்ச்சை...
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று அந்நாட்டின் வேளாண் துறை அமைச்சர் ப்ரூக் ரோலின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இரவு (பிப்.2) ஒப்புதல் தெரிவித்தார். மேலும், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், டிரம்ப் தெரிவித்ததாவது: “எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்த இந்தியா முடிவுசெய்துள்ளது. ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார். அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவின் எண்ணெய்யை அதிகளவில் வாங்குவார்கள்” என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இதனிடையே, அமெரிக்க வேளாண் துறை அமைச்சர் ப்ரூக் ரோலின்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“அமெரிக்கா - இந்தியா இடையேயான புதிய ஒப்பந்தம் மூலம் அமெரிக்க விவசாயப் பொருள்கள் இந்திய சந்தைக்கு மிகப்பெரிய ஏற்றுமதி செய்யும். விலைகளை உயர்ந்து, கிராமப்புற அமெரிக்கா லாபத்தை ஈட்டும்.
2024 ஆம் ஆண்டில், இந்தியாவுடனான அமெரிக்காவின் விவசாய வர்த்தகப் பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகை, அமெரிக்க விவசாயப் பொருள்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் வேளாண் துறையில் அமெரிக்கா முதல் வெற்றியைப் பெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து என்னென்ன வேளாண் பொருள்களை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
India deal is a victory for American farmers! Controversy erupts over the Agriculture Minister's post!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.