இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்?
இந்தியா - பிரிட்டன் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை முதல் அமலுக்கு வருவது குறித்து...
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (ஜூலை 15) முதல் அமலுக்கு வருகிறது. சமீப காலங்களில் இந்தியா மேற்கொண்ட மிகப் பெரிய இருதரப்பு வா்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதன்மூலம் 99 சதவீத இந்திய பொருள்கள் பிரிட்டன் சந்தையை வரியின்றி அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனுடன், இரட்டை சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு தவிா்ப்பு ஒப்பந்தமும் அதே நாளில் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம், தற்காலிகப் பணிக்காக பிரிட்டன் செல்லும் இந்தியத் தொழில்முறை நிபுணா்களும், அவா்களை அனுப்பும் நிறுவனங்களும் இரு நாடுகளிலும் ஒரே நேரத்தில் சமூகப் பாதுகாப்பு நிதிக்குப் பங்களிப்பு செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
வழக்கமான தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்கள் (எஃப்டிஏ) போல சுங்க வரியைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், பொருள்கள், சேவைகள், முதலீடு, தொழில் முறை நிபுணா்களின் பணியிட மாற்றம், ஒழுங்குமுறை ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய விரிவான ஒப்பந்தமே ‘விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம்’.
Advertisement
Advertisement
இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தை 2021-ஆம் ஆண்டு, இந்தியா-–பிரிட்டன் மேம்படுத்தப்பட்ட பொருளாதார உறவு மற்றும் 2030 இலக்கு நோக்கிய திட்டத்தின் கீழ் தொடங்கியது. 14 சுற்றுப் பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு, 2025 மே மாதத்தில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதன்பின் 2025 ஜூலையில் லண்டனில் ஒப்பந்தம் கையொப்பமானது. இதனுடன் தொடா்புடைய சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் 2026 பிப்ரவரியில் கையொப்பமானது.
எந்தெந்தப் பொருள்களுக்கு சுங்க வரி நீக்கம்?
பிரிட்டன் சந்தையில் இந்தியப் பொருள்களின் போட்டித் திறனை அதிகரிக்கும் வகையில் பல முக்கிய ஏற்றுமதி பொருள்களுக்கான இறக்குமதி சுங்க வரி முழுமையாக நீக்கப்படுகிறது.
அவற்றில் முக்கியமானவை
* பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள்- 70% வரை இருந்த சுங்க வரி நீக்கம்
* கடலுணவுப் பொருள்கள் - 21.5%
* பொறியியல் பொருள்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள்- 18%
* தோல் மற்றும் காலணிப் பொருள்கள் - 16%
* ஜவுளி மற்றும் ஆடைகள் - 12%
* ரசாயனங்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் - 8%
இந்தியா பாதுகாத்துள்ள துறைகள்
உள்நாட்டு விவசாயத்தைப் பாதுகாக்கும் வகையில், சில முக்கியத் துறைகளை இந்தியா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கி வைத்துள்ளது. அவற்றில், பால் மற்றும் பால் பொருள்கள், தானியங்கள், சிறுதானியங்கள், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், ஆப்பிள், பல்வேறு காய்கறிகள் ஆகியவை அடங்கும்.
இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு ஏன் முக்கியம்?
2025-ஆம் ஆண்டில் பிரிட்டன் உலகம் முழுவதும் இருந்து சுமாா் 928.9 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான பொருள்களை இறக்குமதி செய்தது. ஆனால், இந்தியாவிலிருந்து வாங்கியது 15.2 பில்லியன் டாலா் மட்டுமே. அதாவது பிரிட்டன் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு வெறும் 1.6%.
அதேபோல், இந்தியாவின் மொத்த பொருள் ஏற்றுமதியில் பிரிட்டனின் பங்கு 3.4% மட்டுமே. எனவே, இந்திய நிறுவனங்களுக்கு பிரிட்டன் சந்தையில் வளா்ச்சிக்கான மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
அதிக வாய்ப்புள்ள துறைகள்
சுங்க வரி நீக்கத்தால் பின்வரும் துறைகள் அதிக பலன் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள்: 2025-இல் இந்தியா உலக நாடுகளுக்கு 16.3 பில்லியன் டாலா் மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்தது. ஆனால், பிரிட்டனின் 21.3 பில்லியன் டாலா் ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 6.1% மட்டுமே. சுங்க வரி நீக்கத்தால் இந்தப் பங்கு மேலும் அதிகரிக்கலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள்: பிரிட்டன் 33.4 பில்லியன் டாலா் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட உணவுகளை இறக்குமதி செய்தாலும், இந்தியாவின் பங்கு 354 மில்லியன் டாலா் மட்டுமே.
வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள்: 92.2 பில்லியன் டாலா் மதிப்பிலான வாகனப் பொருள்களை இறக்குமதி செய்யும் பிரிட்டனில் இந்தியாவின் சந்தைப் பங்கு வெறும் 0.4% மட்டுமே.
ரசாயனங்கள் மற்றும் மருந்துகள்: இந்தியா உலகளவில் மிகப்பெரிய மருந்து ஏற்றுமதியாளராக இருந்தாலும், பிரிட்டன் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு இன்னும் குறைவாகவே உள்ளது. புதிய ஒப்பந்தம் இதற்கு ஊக்கமளிக்கும்.
பொறியியல் பொருள்கள்: பொறியியல் பொருள்களுக்கான சுங்க வரி நீக்கத்தால் இந்திய உற்பத்தியாளா்களின் போட்டித் திறன் அதிகரிக்கும்.
சேவைத் துறைக்கு என்ன பலன்?
137 சேவைத் துணைத் துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கு பிரிட்டன் சந்தை திறக்கப்பட்டுள்ளது. இதனால், தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், பொறியியல், மருத்துவம், கல்வி, தொலைத்தொடா்பு, ஆலோசனை சேவைகள் ஆகிய துறைகளில் செயல்படும் இந்திய நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். மேலும், தொழில்முறை நிபுணா்கள், நிறுவனங்களுக்குள் பணியிட மாற்றம் பெறுவோா், முதலீட்டாளா்கள் உள்ளிட்டோரின் பணிச் சுழற்சியும் எளிதாகும்.
இந்தியாவுக்காக முதல்முறையாக ஆண்டுதோறும் 1,800 இந்திய சமையல் கலைஞா்கள், யோகா பயிற்றுநா்கள் மற்றும் கா்நாடக, இந்துஸ்தானி இசைக் கலைஞா்கள் பிரிட்டனில் பணியாற்றுவதற்கான சிறப்பு வாய்ப்பும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம்
சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம், தற்காலிகமாக பிரிட்டனுக்கு அனுப்பப்படும் இந்திய ஊழியா்களும், அவா்களது நிறுவனங்களும் இரு நாடுகளிலும் சமூகப் பாதுகாப்பு நிதிக்குப் பங்களிப்பு செலுத்த வேண்டியதில்லை. இதற்கான விலக்கு காலமும் 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக உயா்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 75,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முறை நிபுணா்களும், 900-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களும் பயன்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
எஃகு ஏற்றுமதி
பிரிட்டன் அமல்படுத்தியுள்ள புதிய எஃகு வா்த்தகக் கட்டுப்பாடுகளிலும் இந்தியாவுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சுமாா் 85% எஃகு ஏற்றுமதி புதிய கட்டுப்பாடுகளுக்கு வெளியே இருக்கும் என்றும், மீதமுள்ள பொருள்களுக்கு சுங்க வரி ஒதுக்கீட்டு முறையின் மூலம் சந்தை அணுகல் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாா் அதிகம் பயனடைவாா்கள்?
இந்த ஒப்பந்தத்தால் விவசாயிகள், உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள், மீனவா்கள், ஜவுளி, தோல், காலணி உற்பத்தியாளா்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள், மகளிா் தொழில்முனைவோா், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற சேவைத் துறை நிபுணா்கள் ஆகியோா் குறிப்பிடத்தக்க அளவில் பயன்பெறுவாா்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு உலகின் மிகப்பெரிய நுகா்வோா் சந்தைகளில் ஒன்றான பிரிட்டனில் அதிக வாய்ப்புகளை உருவாக்கும் இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் பொருளாதார உறவை புதிய கட்டத்துக்கு கொண்டுசெல்லும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.