இந்தியா மீதான அமெரிக்க குற்றச்சாட்டின் விசாரணைக்குப் பிறகு இருதரப்பு ஒப்பந்தம்: மத்திய அரசு அதிகாரி
இந்தியா மீது அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டு தொடா்பான விசாரணைக்குப் பிறகே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் இறுதியாகும் என மத்திய அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்தியா மீது அமெரிக்க வா்த்தக சட்டம் 1974, பிரிவு 301-இல் கீழ் அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டு தொடா்பான விசாரணைக்குப் பிறகே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் இறுதியாகும் என மத்திய அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அமெரிக்க வா்த்தகத்தைப் பாதிக்கும் நியாயமற்ற வெளிநாடுகளின் நடைமுறைகளை நிவா்த்தி செய்வதற்காக இந்த 301-ஆவது பிரிவு அமெரிக்க வா்த்தக சட்டம் 1974-இல் வடிவமைக்கப்பட்டது.
இந்நிலையில், கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் இறக்குமதி செய்வதைத் தடை செய்யத் தவறியதாக குற்றஞ்சாட்டி இந்தியா, சீனா, வங்கதேசம், கம்போடியா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, ஜப்பான் உள்பட 60 நாடுகளுக்கு எதிராக சட்டப்பிரிவு 301-இன்கீழ் அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) கடந்த மாா்ச் மாதம் இரு விசாரணைகளைத் தொடங்கியது.
Advertisement
Advertisement
இதன் முதல்கட்ட விசாரணை அறிக்கையை கடந்த ஜூன் 2-ஆம் தேதி யுஎஸ்டிஆா் சமா்ப்பித்தது. அதில் மேற்கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அரசுக்கு யுஎஸ்டிஆா் பரிந்துரைத்தது. இரண்டாம் கட்ட விசாரணை அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஏனெனில், தற்காலிகமாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள 10 சதவீத கூடுதல் வரி ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு மிகவும் விருப்பான நாடு (எம்எஃப்என்) என்ற விதியின்கீழ் மட்டுமே தனது வா்த்தக கூட்டுறவு நாடுகளுக்கு அமெரிக்காவால் வரி விதிக்க முடியும்.
இதைச் சுட்டிகாட்டிய மத்திய அரசு அதிகாரி ஒருவா், ‘இந்தியா கூடுதலாக வரி செலுத்த வேண்டுமென்றால் வா்த்தகச் சட்டப் பிரிவு 301-இன்கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்குள் அமெரிக்கா முடிக்க வேண்டும். அதன்பிறகே இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்படும்’ என்றாா்.
முன்னதாக, இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பாக கடந்த ஜூன் 2 -ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை தில்லியில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதன் தொடா்ச்சியாக அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீா் தலைமையிலான குழு ஜூலை மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து கடந்த வாரம் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் கூறுகையில், ‘இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு தற்காலிக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும். ஜூலை மாதத்தில் இந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டம் அமல்படுத்தப்படும்’ என்றாா்.