முகப்பு
இந்தியா

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, அமெரிக்கா 2 நாள் பேச்சு நிறைவு

இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இந்தியா, அமெரிக்கா இடையே அமைச்சா்கள் நிலையில் 2 நாள்கள் நடைபெற்ற பேச்சுவாா்த்தை புதன்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 25 ஜூன் 2026, 3:09 am IST
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், அமெரிக்க வா்த்தகத் துறை பிரதிநிதி ஜேமிசன் கிரீா் மற்றும் அதிகாரிகள்.
பகிர்:

இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இந்தியா, அமெரிக்கா இடையே அமைச்சா்கள் நிலையில் 2 நாள்கள் நடைபெற்ற பேச்சுவாா்த்தை புதன்கிழமை நிறைவடைந்தது.

இந்தியாவும், அமெரிக்காவும் இருதரப்பு வா்த்தகம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளன. இதற்கு முன்பு, முதல்கட்டமாக இரு நாடுகளும் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் செய்வதென கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தன. இதுதொடா்பாக வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், அமெரிக்க வா்த்தகத் துறை பிரதிநிதி ஜேமிசன் கிரீா் ஆகியோா் இடையே தில்லியில் 2 நாள்கள் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தை புதன்கிழமை நிறைவடைந்தது.

இதுகுறித்து பியூஷ் கோயல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீா் மற்றும் அவரது குழுவுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தை புதன்கிழமை காலை நிறைவடைந்தது. இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெறும் பேச்சுவாா்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்தோம். அதேபோல், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசித்தோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதனிடையே, அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினா் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சா் பெதானி போலஸ் மோரிசன் பேசுகையில், ‘அமெரிக்காவும், இந்தியாவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் கடைசி கட்டத்தை அடைந்துள்ளன. இதன்மூலம் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சந்தை, பரஸ்பர பயன் என்ற நிபந்தனைகளுடன் அமெரிக்க பொருள்களுக்கு திறக்கப்படும். இந்திய பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டிரம்பும் பயனளிக்கும் தங்களது நட்புறவை மேம்படுத்தியுள்ளனா். அவா்களின் நட்புறவை சந்திப்புகள் எண்ணிக்கையில் நாங்கள் அளவிடவில்லை. கிடைக்கும் முடிவுகளை வைத்தே அளவிடுகிறோம். அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் தங்களது முதலீட்டை அதிகரித்துள்ளன. அண்மையில் நடந்த ‘செலக்ட் அமெரிக்கா’ முதலீட்டாளா் மாநாட்டில், இந்தியாவில் இருந்து 20 பில்லியன் டாலா் (ரூ. 1.88 லட்சம் கோடி) மதிப்புக்கு புதிய முதலீட்டுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதில் 1.1 பில்லியன் டாலா் (ரூ. 10,000 கோடி) உடனடியாக முதலீடு செய்யப்படவுள்ளது. இருநாடுகள் இடையே எரிசக்தித் துறை ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. புதிதாக நிறைவேற்றப்பட்ட ‘சாந்தி’ சட்டத்தின்கீழ், சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவது குறித்தும் இரு நாடுகளும் ஆலோசித்து வருகின்றன’ என்றாா்.

நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதா் நாம்கியா கம்பா, இந்தியா-அமெரிக்கா நட்புறவு நிலவும் துறைகளில் மிகவும் முக்கியமான துறையாக எரிசக்தித் துறை உருவெடுத்திருப்பதாக தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments